வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கத்தைத் தொடர்ந்து 5 நெருப்புக் கோழிகளும் உயிரிழப்பு
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து ஏழு நெருப்புக் கோழிகள் இறந்ததால், பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதா என பூங்கா ஊழியர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண் சிங்கம் உயிரிழந்தது.
கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பூங்காவில் பராமரிக்கப்படும் 35 நெருப்புக் கோழிகளில் கடந்த திங்கட்கிழமை ஒரு நெருப்புக் கோழி உயிரிழந்தது. மற்றொரு நெருப்புக் கோழி, வாயில் ரத்தம் கசிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
இந்நிலையில், 5 நெருப்புக் கோழிகள் நேற்று உயிரிழந்தன. பறவைக்காய்ச்சல் காரணமாக இந்த நெருப்புக் கோழிகள் உயிரிழந்ததா என பூங்கா அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். மீதமுள்ள 28 நெருப்புக் கோழிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பறவைக்காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருந்த 22வயதான கவிதா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக பெண் சிங்கம் உயிரிழந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave your comments here...