அம்மா’ உணவகங்களில் சப்பாத்தி இல்லை – சென்னை மாநகராட்சி விளக்கம்..!

தமிழகம்

அம்மா’ உணவகங்களில் சப்பாத்தி இல்லை – சென்னை மாநகராட்சி விளக்கம்..!

அம்மா’ உணவகங்களில் சப்பாத்தி இல்லை – சென்னை மாநகராட்சி விளக்கம்..!

சென்னை மாநாகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 400 அம்மா உணவகங்களும், பொது மருத்துவமனைகளில் 7 அம்மா உணவகங்களும் என 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் 4 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு தற்போது 403 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன.

இந்த 403 அம்மா உணவகங்களிலும் காலை வேளையில் இட்லி, பொங்கல், மதிய வேளையில் சாம்பார் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதமும் இரவு வேளையில் சப்பாத்தியும் தரமாக தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தொடர்ந்து மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நிதி நெருக்கடி நிலையிலும் இந்த அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்திவருகிறது. அம்மா உணவகங்களுக்கு தேவையான அரசி, கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாகவும், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, எண்ணெய் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் கூட்டுறவு பண்டக சாலைகளிலிருந்து பெறப்பட்டுவருகிறது.

இவ்வாறு பெறப்படும் பொருட்களில் கோடுமை தனியார் ஆலைகளில் மாவாக அரைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கடந்த 10 நாள்களாக ஒரு சில மண்டலங்களில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

இதுபோன்று சப்பாத்தி வழங்குவதில் தடங்கல் ஏற்படுகின்ற நேரங்களில் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கும் நிகழ்வானது அவ்வப்போது நடைபெறுவது இயல்பான ஒன்றே. எடுத்துக்காட்டாக 2020-ம் ஆண்டு கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் ஆலைகளில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும தற்பொழுது சப்பாத்தி இரவு வேளைகளில் வழங்கப்பட்டுவருகிறது. மேலும், தேவையான சமையல் பொருட்களும் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், 403 அம்மா உணவகங்களில் பணியில் உள்ள எந்த ஒரு சுய உதவிக் குழு உறுப்பினரும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை. ஒரு அம்மா உணவகத்துக்கு விற்பனையை கருத்தில்கொண்டு அதிகபட்சமாக 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பல அம்மா உணவகங்களில் 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் மற்றும் பல அம்மா உணவகங்களில் பற்றாக்குறையுடனும் உறுப்பினர்கள் உள்ளனர். அனைத்து அம்மா உணவகங்களிலும் விற்பனைக்கு ஏற்ப சமச்சீராக இருக்கும் வகையில் உறுப்பினர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...