17 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணிகள்.!
- October 10, 2021
- jananesan
- : 898
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதன்பின் கடந்த 1903 மற்றும் 1904ம் ஆண்டுகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் சத்தியமூர்த்தி குழுவினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது 600 சதுர மீட்டர் அளவில் அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழாய்வு பணி துவங்கியுள்ளது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்துள்ளார்.
திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அகழாய்வு பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளன.
அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி:-ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். தற்போது அதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. ஆய்வு பணிக்காக மத்திய அரசு ரூ.17 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி போதுமானதாக இருக்காது. எனவே, கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
Leave your comments here...