சபரிமலை அய்யப்பன் கோவில் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு..!
சபரிமலையில் எல்லா வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. 4 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு, பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும் கூட, இந்து அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த ஆண்டு மகரவிளக்கு வழிபாட்டின்போது போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முயற்சித்த வேளையில் அதற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு தீவிரம் காட்டியது. இருப்பினும் இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரால் 56 மறு ஆய்வு மனுக்கள், 4 ‘ரிட்’ மனுக்கள் மற்றும் 5 இடமாற்ற மனுக்கள் என மொத்தம் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. நாயர் சர்வீஸ் சொசைட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி, திருவாங்கூர் தேவசம் போர்டு, கேரள மாநில அரசு என பல தரப்பினரும் தீர்ப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். சபரிமலை கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிற திருவாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசுடன் இணைந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த ஆதரவு தெரிவித்து பல்டி அடித்தது நினைவுகூரத்தக்கது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 17-ந் தேதி பதவி ஓய்வு பெறுகிற நிலையில், அதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது.
இப்போது 9 மாதங்களுக்கு பின்னர் சபரிமலை வழக்கில் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு வழிபாடு வரும் 17-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் இன்றைய தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave your comments here...