மலேரியா காய்ச்சலுக்கான தடுப்பூசி தயாரிக்கும் இந்தியாவின் ‘பாரத் பயோடெக்’ நிறுவனம்
மலேரியா காய்ச்சலால் ஆண்டுக்கு 20 கோடி பேர் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் ஆண்டுக்கு 4 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இதில் பெரும்பாலும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த குழந்தைகள் அதிகளவில் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
கடந்த 1987ல் மலேரியா காய்ச்சலை தடுக்க, ‘மாஸ்குயிரிக்ஸ்’ என்ற தடுப்பூசியை, பிரிட்டனைச் சேர்ந்த ஜி.எஸ்.கே., எனப்படும் ‘கிளாக்ஸோ ஸ்மித் கிளைன்’ என்ற நிறுவனம் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்காக 2019 முதல் எட்டு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு, இந்த மேம்படுத்தப்பட்ட மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்த மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியான இதை, இந்தியாவில் ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இதன் தயாரிப்பு பணிகள் துவங்க சில ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜி.எஸ்.கே., நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, பாரத் பயோடெக் நிறுவனம் பரிமாற்றம் செய்து கொள்ள உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ஜனவரியில் கையெழுத்தாகி உள்ளது.தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம், ஏற்கனவே கொரோனா வைரசுக்கான ‘கோவாக்சின்’ தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
Leave your comments here...