மண்டல கால பூஜை : சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி..!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் மண்டல மற்றும் மகர விளக்கு விழா தொடங்கவுள்ளது.
இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தினசரி குறைந்த அளவிலான பக்தர்களே சபரிமலை ஐயப்பனை காண அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், மண்டல கால பூஜையின்போது தொடக்கக் கட்டத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. தேவைப்பட்டால் வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். தரிசனத்திற்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அல்லது கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
10 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு வழங்கப்படும். தரிசனம் முடிந்த உடன் பக்தர்கள் பம்பைக்கு திரும்பிச் சென்றுவிட வேண்டும்.
இவ்வருடமும் சன்னிதானத்தில் தங்க அனுமதி இல்லை. எருமேலி பாதை மற்றும் புல்மேடு வழியாக சன்னிதானத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. பம்பையில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.
Leave your comments here...