தடுப்பூசி விவகாரம் : பிரிட்டனில் இருந்து வருபவர்களை 10 நாட்கள் தனிமைபடுத்த முடிவு – இந்தியா பதிலடி.!
ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து, கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கியது.
இதை, மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, சீரம் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்து நம் நாட்டில் வினியோகித்து வருகிறது. பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு, முன்னர் பிரிட்டன் அரசு வெளிநாட்டு பயணியருக்கான பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், பிரிட்டன் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டு இடம் பெறவில்லை.
எனவே இரண்டு, ‘டோஸ்’ கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்திய பயணியரை தடுப்பூசி போட்டவராக கருதமுடியாது. அடுத்த மாதம் 4ம் தேதி முதல் பிரிட்டன் வரும் இந்திய பயணியர் புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். பிரிட்டனில் 10 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். அந்த காலகட்டத்தில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.இதையடுத்து, மாற்றம் செய்யப்பட்ட பயண வழிகாட்டுதல்களை பிரிட்டன் அரசு வெளியிட்டது. அதில், ‘சீரம் இந்தியா நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனாலும், இந்திய பயணியருக்கான கட்டுப்பாடுகள் தொடரும்’ என, குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பிரிட்டனின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 4ம் தேதி முதல் அமலுக்கு வரும். பிரிட்டனில் இருந்து வரும் அனைவருக்கும் பொருந்தும்.வரும் 4ம் தேதி முதல், பிரிட்டனில் இருந்து இந்தியா வருபவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், கிளம்பும் 72 மணி நேரத்திற்கு முன்னர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
மேலும் விமான நிலையத்தில் வந்ததும், இந்தியா வந்து 8 நாட்கள் ஆன பின்னரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும். பிரிட்டனில் இருந்து வரும் அந்நாட்டு குடிமக்கள், இந்தியாவில் அவர்கள் தங்கியிருக்கும் இடம் அல்லது வீட்டில் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Leave your comments here...