ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்..!
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகிற இந்த வேளையில் நடைபெறுகிற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்துகொள்கிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் என உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடியும் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதை ஏற்று பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், நேற்று முன்தினம் நியூயார்க் சென்றுள்ளார். பிரதமர் மோடியுடன் செல்கிற உயர் மட்டக்குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா மற்றும் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
Leave your comments here...