உ.பி.யில் நான்கரை ஆண்டு கால பாஜக ஆட்சியில் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன – முதல்வர் யோகி ஆதித்யநாத்
கடந்த 4.5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உபியில் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உபியில் பாஜக ஆட்சி அமைந்து 4.5 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நிருபர்களை சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: கடந்த 4.5 ஆண்டுகளை நல்ல நிர்வாகத்திற்காக அர்ப்பணித்தது மறக்க முடியாதது. கிரிமினல்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 4.5 ஆண்டுகளில், உ.பி.,யில் மதக்கலவரம் நடக்கவில்லை.
பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக ரோமியோ எதிர்ப்பு படை, பெண்களுக்காக பிங்க் பூத்கள் அமைக்கப்பட்டன.
கடந்த காலத்தில் மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் தங்களுக்காக வீடுகளை கட்டினர். ஆனால், நாங்கள் ஏழைகளுக்காக வீடு கட்டி கொடுத்தோம். முந்தைய அரசு போல் அல்லாமல், அரசு நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தினோம். முந்தைய ஆட்சியாளர்கள் பணியிட மாற்றத்தை ஒரு தொழிலாக செய்த நேரத்தில், சிறப்பாக பணியாற்றவும், பொது மக்கள் மத்தியில் பொறுப்பானவர்களாக செயல்படவும் ஊக்குவித்தோம்.
பாஜக ஆட்சியில் 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டோம். எளிதாக தொழில் செய்யும் மாநிலங்கள் பட்டியலில் உ.பி., முன்னேறியதால், மாநிலத்தில் முதலீடுகள் குவிந்து வருகிறது. ராமர் கோயில் எப்போது கட்டப்படும் என கேள்வி எழுப்பியவர்களுக்கு, பிரதமர் அடிக்கல் நாட்டிய தினத்தில் பதில் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...