இந்தியாவில் “வாகனம் – ட்ரோன்” தொழில்துறையை ஊக்குவிக்க ரூ.26,000 கோடி – மத்திய அரசு ஒப்புதல்
- September 16, 2021
- jananesan
- : 474
- 'ட்ரோன், வாகனம்
வாகனம் மற்றும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமான தயாரிப்பு துறைகளுக்கு, உற்பத்தி அடிப்படையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தத் திட்டத்தின் கீழ், 42 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் குவியும். இதனால் உற்பத்தி மதிப்பு 2.30 லட்சம் கோடி ரூபாயாக உயரும். புதிதாக 7.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.பாரம்பரிய வாகனங்களுடன், மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் அனைத்து வகை வாகனங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
ட்ரோன் தயாரிப்பு துறைக்கு மூன்றாண்டுகளுக்கு ஊக்கச் சலுகை வழங்கப்படும். இதனால் 5,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முதலீடுகள் குவியும். 1,500 கோடி ரூபாய்க்கு விற்பனை உயரும். 10 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.இவ்வாறு அவர் பேசினார்.9 சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல்நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், தொலை தொடர்பு துறையில், ஒன்பது முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக, தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதன்படி, தொலை தொடர்பு துறையில், மத்திய அரசின் முன் அனுமதியின்றி, 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளலாம். ஸ்பெக்ட்ரம், ஏ.ஜி.ஆர்., சார்ந்த நிலுவையை செலுத்த, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, நான்கு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...