ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகம்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை – அமைச்சர் செந்தில் பாலாஜி

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை – அமைச்சர் செந்தில் பாலாஜி

விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதன்பின், அமைச்சர் அளித்த பேட்டி: தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து, 4.52 லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.அடுத்தாண்டு மார்ச்சுக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இவற்றில், இலவச மின் இணைப்பு, அரசு திட்டம், சுய நிதி திட்டம், தட்கல் திட்டம் போன்றவை அடங்கும். பதிவு செய்து காத்திருப்போருக்கு, மின் வாரியத்தில் இருந்து கடிதம் அனுப்பப்படும்.

அதற்கு, 30 நாட்களுக்குள் இசைவு தெரிவிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாவட்டங்களில், தேர்தல் முடிந்த பின் மின் இணைப்பு வழங்கப்படும். கடும் நிதி நெருக்கடியிலும், விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக, இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

புதிய மின் உற்பத்தி திட்டங்கள், மின் வினியோக கட்டமைப்பு பணிகளும் விரைவில் துவக்கப்படும். தமிழகத்திற்கு தினமும் 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. நம் சொந்த உற்பத்தி 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.தனியாரிடமிருந்து 40 சதவீதம் வாங்குகிறோம்.மீதம் மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து பெறப்படுகிறது. இந்த ஆண்டு 4,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி; 3,000 மெகாவாட் நீர் மின் உற்பத்தி; 2,000 மெகாவாட் எரிவாயு மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.

மாதாந்திர மின் கணக்கெடுப்பு நடத்த, கணக்கெடுப்பு பணியாளர்கள் எண்ணிக்கை இரு மடங்கு தேவை. ஏற்கனவே வாரியத்தில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, வரும் காலத்தில் மாதாந்திர கணக்கெடுப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...