சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த இறக்குமதி வரி குறைப்பு – மத்திய அரசு
மக்களுக்கு சமையல் எண்ணெய் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, கச்சா பாமாயில், கச்சா சோயாபீன்ஸ் எண்ணெய், கச்சா சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான நிலையான வரி வீதத்தை 2.5 சதவீதமாக சுங்கத்துறை குறைத்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன்ஸ், சூரிய காந்தி எண்ணெய்க்கான நிலையான வரி 32.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
2021-22ம் ஆண்டில் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெயின் விலை அதிகமாக இருந்தது. சமையல் எண்ணெய்யின் உள்நாட்டு விலை அதிகரிப்புக்கு, சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியும் ஒரு காரணம்.
இந்த விலையை குறைப்பதற்காக, மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
1. கச்சா பாமாயிலுக்கான நிலையான வரி வீதம் கடந்த ஜூன் 30ம் தேதி முதல், செப்டம்பர் 30ம் தேதி வரை 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
2. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கான கட்டுப்பாடு கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி முதல் 2021 டிசம்பர் 31ம் தேதி வரை முற்றிலும் தளர்த்தப்பட்டது.
3. கச்சா சோயாபீன்ஸ் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கான நிலையான வரி வீதம் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் 7.5 சதவீதம் குறைக்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன்ஸ் எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய்க்கான வரி கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 37.5 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
வரி குறைப்பால் அரசுக்கு ஏற்கனவே ஆண்டுக்கு ரூ.3,500 கோடி இழப்பு ஏற்பட்டது. தற்போதைய இறக்குமதி வரி குறைப்பால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,100 இழப்பு ஏற்படும். மொத்தம் வருவாய் துறைக்கு ரூ.4,600 கோடி இழப்பு ஏற்படும்.
Leave your comments here...