தேசிய கல்வி நிறுவன தரவரிசை : தொடர்ந்து 3-வது முறையாக முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி..!
தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்தியா தரவரிசை பட்டியல் 2021-ஐ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்:- சர்வதேச கற்றல் துறைக்கான இந்தியாவின் பங்களிப்பாக துடிப்பான மற்றும் முன்னுதாரணமான தரவரிசை பட்டியல் திகழும் என்றும், எனவே, நமது தரவரிசை பட்டியல் நாட்டுக்கு மட்டுமில்லாது உலகத்துக்கே, குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு, அளவுகோலாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டுமென்றும் கூறினார். பிராந்திய தரவரிசை பட்டியலை உருவாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய தரவரிசை பட்டியல் 2021-ன் முக்கிய அம்சங்கள்:
* ஒட்டுமொத்த பிரிவிலும் பொறியியலிலும் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம்
* பல்கலைக்கழகங்களிலும் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆராய்ச்சி நிறுவன பிரிவிலும் ஐஐஎஸ், பெங்களூரு முதலிடம்
* மேலண்மையில் ஐஐஎம் அகமதாபாத் முதலிடம், மருத்துவ கல்வியில் தொடர்ந்து நான்காவது முறையாக புதுதில்லி எய்ம்ஸ் முதலிடம்
* மருந்தியலில் தொடர்ந்து நான்காவது முறையாக ஜாமியா ஹம்தார்த் முதலிடம்
* கல்லூரிகள் பிரிவில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மிராண்டா கல்லூரி முதலிடம்
* கட்டிடவியலில் ஐஐடி காரக்பூரை பின்னுக்கு தள்ளி ஐஐடி ரூர்கி முதல் முறையாக முதலிடம்
* சட்டப் படிப்பில் தொடர்ந்து நான்காவது முறையாக பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பள்ளி முதலிடம்
* முதல் 10 கல்லூரிகளில் ஐந்து தில்லியில் உள்ளன
* மணிப்பால் பல் மருத்துவக் கல்லூரி பல் மருத்துவப் பிரிவில் முதலிடம்.
இந்தியா தரவரிசை பட்டியல் 2021-ஐ https://www.nirfindia.org/2021/Ranking.html எனும் இணைப்பில் காணலாம்.
இந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சர்கள் அன்னப்பூர்ணா தேவி, டாக்டர் சுபாஸ் சர்கார் மற்றும் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், உயர்கல்வி செயலாளர் அமித்காரே, பல்கலைக்கழக மானிய குழு தலைவர் பேராசிரியர் டி பி சிங், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழு தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே, என்பிஏ தலைவர் பேராசிரியர் கே.கே.அகர்வால், என்பிஏ உறுப்பினர் செயலர் டாக்டர் அனில்குமார் நஸ்ஸா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Leave your comments here...