பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் – அலகாபாத் ஐகோர்ட்டு..!
உத்தர பிரதேசத்தில், பசுவதை தடை சட்டத்தின் கீழ் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித் என்பவர் கடந்த மார்ச் 8-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதி சேகர் யாதவ் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த மனு நிராகரிக்கப்பட்டு, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இது குறித்து தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது;- இந்தியக் கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதியாக பசு இருக்கிறது. இப்போதுள்ள சூழலில் பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பசு பாதுகாப்பை இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக கொண்டுவர வேண்டும். நாட்டின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் பாதிப்படையும்போது தேசம் பலவீனமாகிறது. ஆதலால் மத்திய அரசு, பசுவை துன்புறுத்துவோரை கடுமையாக தண்டிக்கும் பிரிவுகளைச் சேர்க்க வேண்டும்.
ஒரு சிலரின் சுவைக்காக நீங்கள் உயிர்களைப் பறிக்க முடியாது. கொல்லும் உரிமையை விட வாழ்வதற்கான உரிமை உயர்ந்தது. மாட்டிறைச்சி உண்பதை அடிப்படை உரிமையாக ஒருபோதும் கொள்ள முடியாது. மனுதாரர் இதற்கு முன்பும் பசுவதை செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால், மீண்டும் வெளியே வந்து அதே குற்றத்தைச் செய்வார்.
பசுவின் முக்கியத்துவத்தை முஸ்லிம் ஆட்சியாளர்களும் உணர்ந்திருந்தனர். பேரரசர் பாபர், ஹுமாயூன், அக்பர் போன்றோர் தங்களின் பண்டிகைகளில் பசுவதை செய்வதை தடை செய்தனர். மைசூரை ஆண்ட ஹைதர் அலியும் பசுவதையை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றினார்.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் பசுவதை தடையை விரும்புகின்றனர். ஒவ்வொரு முறையும் நாம் நமது கலாசாரத்தை மறந்துவிடுகிறோம். வெளிநாட்டினர் நம்மை தாக்கி, அடிமைப்படுத்தினார்கள். இன்னும் நாம் எச்சரிகையாக இல்லை என்றால், தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய உதாரணம் நம் கண்முன்னால் இருக்கிறது. அதை நாம் மறந்துவிடக் கூடாது என தெரிவித்தார்.
Leave your comments here...