உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரஹா ரோந்து கப்பல் : இந்திய கடலோர காவல் படையில் அர்ப்பணிப்பு..!
இந்திய கடலோர காவல் படையில் விக்ரஹா என்ற ரோந்து கப்பல் இன்று இணைக்கப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் இந்த கப்பலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அந்த விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது :-: நவீன ரக கப்பலான விக்ரஹா, இந்திய கடலோர காவல் படையில் இணையும் இந்தத் தருணத்தில் உங்கள் அனைவருடன் கலந்து கொள்வது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்தக் கப்பல் இணைக்கப்படுவதன் மூலம், நமது கடலோர பாதுகாப்பு திறனின் மேம்பாடும் ராணுவத் துறையில் அதிகரித்துவரும் தற்சார்பு நிலையும் எடுத்துரைக்கப்படுகிறது.தற்போதைய காலத்திற்கு ஏற்ற நவீன தொழில்நுட்பங்கள், 1000 மீட்டர் நீளத்திலான இந்தக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன். கப்பலை இயக்கும் முறை அல்லது தகவல் தொடர்பு சாதனங்கள், உணரிகள் அல்லது இதர உபகரணங்கள் முதலியவை தற்போதைய தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் எதிர்கால தேவைகளையும் நிறைவேற்ற உள்ளன.
கப்பலின் தொழில்நுட்ப விவரங்கள் குறித்து விரிவாக நான் எடுத்துரைக்கப் போவதில்லை, ஆனால், எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு சில விஷயங்கள் பற்றி கட்டாயம் கூறுவேன். முதலில், வடிவமைப்பு முதல் தயாரிப்பு வரை இந்தக் கப்பல் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, இந்திய ராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஒன்று அல்லது இரண்டு கப்பல்களுக்காக அல்லாமல், 7 கப்பல்களுக்கான ஒப்பந்தம் தனியார் துறை நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், ஏழு கப்பல்களுமே இன்று பணியில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கப்பல்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்ளாகவே ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த முக்கிய சாதனைக்காக பாட்டில் அவர்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். 5-6 வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட தற்சார்பு அலை, அப்போது முதல் தொடர்ந்து முன்னோக்கி செல்வதை இது எடுத்துக் காட்டுகிறது.
State-of-the-art @IndiaCoastGuard Ship, 'Vigraha' is being Commissioned in Chennai today. Watch https://t.co/4ykTjrhFsm
— Rajnath Singh (@rajnathsingh) August 28, 2021
இந்த நவீன ரக கப்பல்கள் இந்திய கடலோர காவல் படையில் இணைந்திருப்பதன் வாயிலாக அதன் திறன் பெருவாரியாக அதிகரித்துள்ளது. சுமார் 5-7 சிறிய ரக படகுகளுடன் தொடங்கிய இந்திய கடலோர காவல் படையின் பயணம் இன்று சுமார் 20 ஆயிரம் வீரர்கள், 150 கப்பல்கள் மற்றும் 65 க்கும் மேற்பட்ட விமானங்களுடன் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதனுடன், பெரும்பாலான கடலோர காவல் படை தளங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை என்பதை அறிகிறேன், இதன் மூலம் கடலோர காவல் படையின் பயணம் மேலும் முழுமை பெறுகிறது.
தொடக்கம் முதல், கடந்த 40-45 ஆண்டுகளில் சர்வதேச அளவில் கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் நெருக்கடிகள் மற்றும் பேரிடர்களில் முன்னணி பணியை இந்திய கடலோர காவல் படை மேற்கொண்டுள்ளது. ஆண்டுவாக்கில் கடலோர பகுதிகளில் வசிக்கும் நமது மீனவ மக்களின் பாதுகாப்பு, சுங்கத்துறை மற்றும் அதுபோன்ற அதிகாரிகளுக்கு உதவிகளை அளிப்பது, நமது தீவுகள் மற்றும் முனையங்களில் பாதுகாப்பு அல்லது அறிவியல் தரவு சேகரிப்பு மற்றும் ஆதரவு போன்ற பணிகளிலும் பல்வேறு வழிகளில் நீங்கள் நாட்டிற்கு சேவை புரிந்துள்ளீர்கள்.தனது திறனை அதிகரிப்பதோடு, நாட்டின் திறனை மேம்படுத்துவதிலும் கடலோர காவல் படை தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. பாதுகாப்பு திறன்களின் இந்த வளர்ச்சியின் காரணமாகத்தான் 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு கடல்வழியாக எந்த தீவிரவாத விபத்தாலும் நாம் பாதிக்கப்படவில்லை.
நமது நாட்டிற்கு மட்டுமல்லாமல் உள்ளடக்கிய உணர்வு நிலைக்கு இணங்க, நமது அண்டை நாடுகளுக்கும் உதவியை வழங்க கடலோர காவல் படை எப்போதும் தயார் நிலையில் உள்ளது. கடந்த வருடம் கனரக சரக்கு டாங்கியான ‘நியூ டயமண்ட்’ கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து, இந்த வருடம் ‘எக்ஸ்பிரஸ் பெர்ல்’ கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து முதலியவற்றில் நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு இலங்கைக்கு சரியான நேரத்தில் உதவிகளை வழங்கினீர்கள். இதுபோன்ற உதவிகளை நீங்கள் வழங்காமல் இருந்திருந்தால் அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய விளைவுகளை நினைத்துகூட பார்க்க முடியாது.
அதேபோல, ’வகாஷியோ’ கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் போது மொரிஷியஸ் நாட்டிற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது அண்டை நாடுகளுடன் ஒத்துழைத்து, கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டோரிடமிருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சரக்குகளை கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2008-ஆம் ஆண்டின் பெருங்கடல் மற்றும் கடல் சட்டங்கள் குறித்த அறிக்கையில் கடல்சார் பாதுகாப்பிற்கு ஏழு குறிப்பிட்ட அச்சுறுத்தல்களை அப்போதைய ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அறிவித்திருந்ததை நீங்கள் அறிவீர்கள். கடற் கொள்ளை, தீவிரவாதம், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களின் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகள், மனித கடத்தல், சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். அதேபோல இன்றைய, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட உலகில், உலகின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் நிகழ்வு, மற்ற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது தடுக்க இயலாதது.
அதாவது இந்திய கடல் பகுதியில் சவால்களை நீங்கள் எதிர் கொள்வதன் மூலம் பிராந்திய நலனில் மட்டுமல்லாது, சர்வதேச நலனை பூர்த்தி செய்வதிலும் நீங்கள் முக்கிய பங்காற்றுகிறீர்கள். உங்கள் முயற்சிகளுக்கான வெற்றி, உங்களுக்குக் கிடைத்த வெற்றியும், உலக நாடுகளுடனான நமது உறவுகள், சர்வதேச சட்டங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நமது நடவடிக்கைகள் மற்றும் மனிதநேயத்தை நோக்கிய நமது உறுதித்தன்மைக்குக் கிடைத்த வெற்றியும் கூட.
நமது அண்டை நாடுகளுடனான நட்பு, திறந்த நிலை, பேச்சுவார்த்தை மற்றும் இணைப்பில் சிறப்புக் கவனம் செலுத்தும் மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்கு பார்வையான சாகர் திட்டம் (பகுதியில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி), கடமைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உங்களால் நனவாக்கப்படுகிறது.
இன்று உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. நாடுகளுக்கு இடையேயான பொருளாதார அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகின்றன. மற்றொரு நாட்டில் இருந்து வரக்கூடிய அடுத்த செய்தி குறித்து எதுவும் கூற முடிவதில்லை. இதுபோன்ற வளர்ச்சிகளால் நமது நாடு தாக்கப்படாமல் இருக்க முடியாது. இந்தியப் பெருங்கடலுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள நலன்களைப் பெற்றுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு இது மிகவும் பொருந்தும்.
உலக எண்ணெய் கப்பல்களில் இரண்டில் மூன்று மடங்கு கப்பல்களும், மூன்றில் ஒரு மடங்கு மொத்த சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களும், கொள்கலன் கப்பல்களில் பாதி அளவிற்கு மேலானவை இந்திய பெருங்கடல் பகுதியில் பயணிப்பதால் உலக நாடுகளின் நலனில் இந்த வழித்தடம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நான் தற்போது கூறியவாறு, இது போன்ற பகுதிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே எப்பொழுதும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நண்பர்களே, உலகம் முழுவதும் மாற்றம் ஏற்பட்டு வருவது, நமக்கு அவ்வப்போது கவலை அளிக்கிறது. இது போன்ற எதிர்பாராத தருணங்களில் நமது பாதுகாப்பை நாம் வலுப்படுத்த வேண்டும்.
எனினும், இதுபோன்ற சவாலான தருணங்கள் நமக்கு அளிக்கும் வாய்ப்பை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.நண்பர்களே, சர்வதேச பாதுகாப்பு காரணங்கள், எல்லை பூசல்கள் மற்றும் கடல்சார் மேல் ஆதிக்கத்தால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் நவீனமயமாக்கலை நோக்கி செல்வதுடன், தங்களது ராணுவ ஆற்றலையும் வலுப்படுத்துகின்றன. ராணுவ உபகரணங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் அதாவது 2023-ஆம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் பாதுகாப்பிற்கான செலவினம் 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயரும் என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளன. பெரும்பாலான நாடுகளின் வசம் ஒரு முழு ஆண்டிற்கு செலவு செய்வதற்கு கூட இந்த அளவு தொகை இல்லை! இந்த எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சூழலில் நமது திறன்களை முழுதும் பயன்படுத்தவும், கொள்கைகளை வாய்ப்பாகக் கருதவும், உள்நாட்டு கப்பல் தயாரிப்பு முனையமாக நாட்டை உயர்த்தவும் இன்று நமக்கு பெரும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு அரசு அல்லது தனியார் துறை, உலகத்தரம் வாய்ந்த அமைப்பாக செயல்படுவதற்கு நமது உள்நாட்டு தொழில் துறைக்கு உதவும் வகையிலான கொள்கைகளை அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. ராணுவத் துறையில் உரிமம் பெறுவதற்கு எளிதாக்கப்பட்ட நடைமுறை, ஏற்றுமதிகளுக்கு வலியுறுத்தல், தனியார் துறையினருக்கு ஊக்கமளிப்பு, ராணுவ வழித்தடங்களின் உருவாக்கம், புதிய பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2020 உள்ளிட்ட ஏராளமான சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி நமக்காக மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உலகிற்கும் ராணுவ உற்பத்தி முனையமாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நோக்கி நமது நிறுவனங்கள் செயலாற்றலாம்.
இந்தப் பாதையில் பயணிப்பதே, சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டில் நமது உறுதியாக இருக்க வேண்டும்.நண்பர்களே, இன்று 75-ஆவது சுதந்திரத்தை நாம் கொண்டாடும் வேளையில் நமது தேசிய தலைவர்கள் மற்றும் முன்னோர், தலைசிறந்த மக்களின் கனவை நனவாக்க செயல்படுவதில் நாம் உறுதி பூண்டுள்ளோம். மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல் மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பாதையில் சுதேசி, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை நோக்கி நாம் விரைவாக முன்னேறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.
இந்தக் கப்பலில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்த ‘மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டரையும் இயக்கலாம்’ என்பதை அறிந்தபோது, இதனைக் கப்பலின் ஓர் அம்சமாக மட்டும் கருதாமல், அரசு, கடலோர காவல்படை மற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஆகியவை இணைந்து நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்கும் சின்னமாக இதனை நான் கண்டேன். நாட்டின் நிறுவன தலைவர்களது தொலைநோக்குப் பார்வையான தேசிய பாதுகாப்பின் விரிவாக்கம் மற்றும் ஒத்துழைப்பு தான் இது என்று நான் கருதுகிறேன். இந்த வகையில், இந்திய கடலோர காவல்படை தனித்துவம் வாய்ந்த பணிகளில் ஈடுபடுகிறது.
இந்த பணிக்காக ராணுவ வரலாற்றில் முதன் முறையாக ‘பாதுகாப்பு அமைச்சரின் பாராட்டு கடிதத்தை’ இந்திய கடலோர காவல் படை இந்த ஆண்டு பெற்றுள்ளது. உங்கள் அனைவருக்கும், எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் இது. இதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.நண்பர்களே, பாதுகாப்பு அமைச்சகம் கடலோர காவல்படை மற்றும் எல்&டி நிறுவனத்திற்கு இடையே ‘விக்ரமிலிருந்து’ தொடங்கப்பட்ட பயணம், ‘விஜய்’, ‘வீர்’, ‘வராஹா’, ‘வராத்’ மற்றும் ‘வஜ்ரா’ வழியாக ‘விக்ரஹாவை’ அடைந்துள்ளது. எதிர்காலத்தில் பிரத்தியேக திறன்களுடன் இந்திய கடலோர காவல்படை அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு தனது முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் என்பதை நான் நம்புகிறேன்.
‘விக்ரஹா’ என்ற வார்த்தை நமது உரைகளில் மிக அழகாக கையாளப்பட்டுள்ளது என்பதை எவ்வளவு பேர் அறிவீர்கள் என்பது தெரியவில்லை. ஒருபுறம் ‘எந்தவிதமான அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை’ என்பது இதன் பொருளாகக் கூறப்படுகிறது. மறுபுறம் ‘ஒருவரது கடமை, பொறுப்பின் மீதான கட்டுப்பாடு’ என்றும் கூறப்படுகிறது. எந்தவிதமான சவால்களாலும் பிணைக்கப்படாத, நாட்டிற்கு சேவை ஆற்றும், கடமையை நிறைவேற்றும் குறிப்பிட்ட பணிகளில் ஈடுபட்டுவரும் நமது இந்த விக்ரஹா, நாட்டின் கடலோர எல்லைகளின் பாதுகாப்பில் வெற்றி அடையும் என்று திடமாக நம்புகிறேன்.
இந்தத் தருணத்தில் இத்துடன் எனது உரையை நிறைவு செய்து கொண்டு உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அனைத்து விதமான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்ற உறுதியுடன் அரசின் சார்பாக உங்கள் எதிர்கால முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
Leave your comments here...