புதிய இந்தியாவின் வலுவான தூணாக உருவாகிறது ராமர் கோயில்: பிரதமர் மோடி பெருமிதம்
குஜராத் மாநிலம் சோம்நாத்தில் ரூ.3.5 கோடியில் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையால் பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிக இடவசதியுடன் மொத்த பழைய கோயில் வளாகமும் புனரமைக்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீ சிவ பார்வதி கோயில் கட்ப்படவுள்ளது. ஆன்மிக மற்றும் பாரம்பரிய தலங்களுக்கு புத்தாக்கம் அளிப்பதற்கான பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ.47 கோடி மொத்த மதிப்பீட்டில் சோம்நாத் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டில் ஆன்மீக சுற்றுலாவை வலுப்படுத்த வேண்டும். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி இளைஞர்கள் நமது கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறுவார்கள். நம்பிக்கையை பயத்திலிருந்து ஒடுக்க முடியாது.
கடந்த காலத்திலிருந்து நாம் இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும். சோம்நாத் ஆலயம் பல முறை இடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் சிலைகள் பல முறை சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதை இருந்த இடம் தெரியாமல் அழிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகும் அது மீண்டெழுக்கப்பட்டுள்ளது. இது நமக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.
நமது புதிய இந்தியாவின் வலுவான தூணாக ராமர் கோயில் உருவாக்கப்பட்டு வருகிறது. அழிவை நோக்கி அழைத்து செல்லும் சக்திகளும் பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்களும் சில காலத்திற்கு ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால், மனித இனத்தை அவர்களால் எப்போதும் அடக்கிவிடமுடியாது. அவர்களின் இருப்பு நிரந்தரமல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...