75 ஆவது சுதந்திர தினம்; வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட திட்டம் -முதல் முறையாக கொடியேற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உரை.!
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றினார்.
தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும் பின்னாலும் சென்னை போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட பிறகு மேடை அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திறங்கினார்.
அங்கு தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத்தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல் அமைச்சர் ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் அழைத்து சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏஎற்றுக்கொண்டர். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது மூவர்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்பட்டன. போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர்.
அதைத்தொடர்ந்து சுதந்திரதின நாளில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதாவது:-எனக்கு முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றி. ஆக. 15ல் முதல்வரும், ஜனவரி 26ல் கவர்னரும் கொடியேற்றலாம் என்ற எண்ணத்தை எடுத்து வைத்தவர் கருணாநிதி. முதல்வராக முதன் முதலாக கொடியேற்றி வைத்தவர் கருணாநிதி. அவர் சுதந்திர சிந்தனையாளர். கார்கில் போரின்போது நிதி திரட்டி வழங்கியவர் கருணாநிதி.
இந்திய சுதந்திர விழாவை கொண்டாடும் இந்த ஆண்டில் தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவை ஜனாதிபதி தலைமையில் நடத்தினோம். மகாத்மா காந்தி மதுரைக்கு வந்த போது அரை ஆடையை உடுத்த துவங்கியதும் இந்த ஆண்டு. வஉசியின் 150வது பிறந்த நாள் கொண்டாடுவதும் இந்த ஆண்டு. மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நடக்கிறது. நமது அரசு 6வது முறை ஆட்சியில் அமர்ந்துள்ளோம். மக்களுக்காக நான் உழைத்தேன் மக்கள் என்னை முதல்வராக்கினர்.
150 ஆண்டுகளுக்கு முன்னே விடுதலைக்காக போராடியது தமிழ் மண். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமத்துரை , வேலுநாச்சியார், வ.உசி., திருவிக , பெரியார், பாரதிதாசன், பசும்பொன் முத்துராமலிங்கதேவர். ம.பொ.சி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர். இவர்களின் வீரமும், தியாகமும் என்றும் மறக்க முடியாதவை. வ.உ.சி., யின் 150வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.கார்கில் போரின் போது பிரதமரிடம் 3 தவணைகளாக ரூ.50 கோடி வழங்கிய அரசு அன்றைய திமுக அரசு. நினைவுத்தூண்கள் கல்லால், மண்ணால் உருவானது அல்ல. ரத்தத்தினாலும், தியாகத்தினாலும் உருவானது. தியாகிகளின் உதவித்தொகை ரூ. 17 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும். தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும். மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
மருத்துவ நெருக்கடி, பொருளாதார நெருக்கடி இடையில் மக்கள் தவித்தனர். கோவிட் பாதிப்பில் இருந்து மீட்க போராடிய அனைவரையும் பாராட்டுகிறேன். தமிழக நிதி நிலை சுமையான நேரத்தில் பொறுப்பேற்ற திமுக அரசு மக்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். மக்களுக்கு நிவாரணமாக ரூ. 4 ஆயிரம் வழங்கினோம். பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், அன்னை தமிழில் அர்ச்சனை, அனைவரும் அர்ச்சகராகும் திட்டம், சங்கரய்யாவுக்கு விருது ஆகிய திட்டங்களை நிறைவேற்றியதுடன், 3 கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தி உள்ளோம்.
உலகத்தரத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படுகிறது. மக்களை தேடி மருத்துவம் என திட்டம் துவக்கி உள்ளோம். சமூகம், அறிவியல் , பொருளாதாரம் ஆகியவற்றில் வளர்ச்சி பெற வேண்டும். பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். தமிழகம் முன்னேற இன்னும் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Leave your comments here...