மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு
மதுரையில் தொன்மையான சைவ திருமடங்களில் முக்கியமானது மதுரை ஆதீனம் ஆகும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தில் சன்னிதானமாக அருணகிரிநாதர் பதவி ஏற்றார்.
கடந்த 1975-ம் ஆண்டு முதல் சுமார் 46 ஆண்டுகள் மதுரை ஆதீனமாக பொறுப்பில் இருந்த அருணகிரிநாதர் சைவ சமய வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றினார். இவருக்கு வயது மூப்பின் காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண கிரிநாதர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இயற்கை எய்தினார்.
ஆதீனம் அருணகிரிநாதர் அவரது உடல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதீன மடத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஆன்மீக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று இரவு முதல் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் ஆன்மீக பக்தர்களும் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள அருணகிரிநாதர் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் மதுரை ஆதீனம் மடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அரசியல் பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
மதுரை ஆதீனம் மறைவுக்கு இணையமைச்சர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர், இவர் 1980-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இந்த ஆதீனத்தின் மடாதிபதியாக பொறுப்பில் இருந்தவர். பல கோவில்களின் குடமுழுக்கு விழாக்களை முன்னின்று சிறப்பாக நடத்திய பெருமை இவருக்கு உண்டு. ஏராளமான பள்ளி, கல்லூரி, கோவில் நிகழ்ச்சிகளில் இவர் சொற்பொழிவாற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக 40 ஆண்டுகளாக தொண்டாற்றிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு செய்தி அறிந்து துயரமடைந்தேன். pic.twitter.com/ffhsn5kHq0
— Dr.L.Murugan (@Murugan_MoS) August 14, 2021
மறைந்த மடாதிபதி அருணகிரிநாதர் அவர்கள் பூர்வாசிரமத்தில் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார். ஆன்மிக உலகின் முது பெரும் மடாதிபதி அருணகிரிநாதரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கும் ஆதீனத்தின் பொறுப்பாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையடுத்து அவரது உடல் மாசி வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இதற்கான ஏற்பாடுகள் தருமபுர ஆதீனம் மாசிலாமணி சுவாமி உள்ளிட்ட ஆதீனங்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மதுரையின் அடுத்த ஆதீனமாக ஹரிஹரர் தேசிகர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் இளவரசராக முடிசூட்டப்பட்டவர் ஹரிஹரர் தேசிகர். இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் மறைவு காரணமாக அடுத்த ஆதீனமாக ஹரிஹரர் தேசிகர் 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளது.
Leave your comments here...