பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் : குறைந்த விலையில் வீடுகளைக் கட்டுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள்..!

இந்தியா

பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் : குறைந்த விலையில் வீடுகளைக் கட்டுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள்..!

பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் : குறைந்த விலையில் வீடுகளைக் கட்டுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள்..!

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்புறம்) கீழ் குறைந்த விலையில் வீடுகளைக் கட்டுவதற்கான நவீன தொழில்நுட்ப துணை இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியுள்ளார்

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக இன்று அளித்த பதில்கள் பின்வருமாறு: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வீடுகளை துரிதமாகவும் தரமாகவும் கட்டுவதற்கு நவீன, புதுமையான, பசுமைவழி தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுமான உபகரணங்களை வழங்குவதற்கு ஏதுவாக பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்புறம்) கீழ் தொழில்நுட்ப துணை இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், பேரிடர் தாங்குதிறன், நிலைத்தன்மை, மலிவான விலை, பல்வேறு நாடுகளின் பருவநிலைக்கு தகுந்த வகையில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் புதுமையான தொழில் நுட்பங்களைக் கண்டறியும் நோக்கத்துடன் உலகளாவிய வீட்டுவசதி தொழில்நுட்ப சவால் – இந்தியா முன்முயற்சி உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களை எடுத்துரைக்கும் வகையில் தமிழகம் (சென்னை) உள்ளிட்ட 6 மாநிலங்களில் தனித்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆறு இலகுரக வீடுகள் கட்டும் திட்டம் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் (நகர்புறம்) மற்றும் இதர திட்டங்களின் கீழ் புதுமையான மற்றும் மாற்று தொழில்நுட்பங்களின் உதவியுடன் சுமார் 16 லட்சம் வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.

கட்டுபடியாகக்கூடிய வாடகை வீட்டு வளாகங்கள் திட்டம்: பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) துணைத் திட்டமான கட்டுபடியாகக்கூடிய வாடகை வீட்டு வளாகங்கள் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக புலம்பெயர் தொழிலாளர்கள்/ ஏழைகள் பயன் அடையும் வகையில் 3,964 வீடுகள் நகர்புற கட்டுபடியாகக்கூடிய வாடகை வீட்டு வளாகங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாநிலங்களில் 5,734 வீடுகளுக்கான கோரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக 18 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 1,02,019 பிரிவுகளைக் கட்டமைப்பதற்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து 66 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மாதிரி வாடகைச் சட்டம்: வாடகை மற்றும் குத்தகை முறைகளில் புதிய சட்டங்களைக் கொண்டு வரவும் அல்லது தற்போதுள்ள வாடகை சட்டங்களில், பொருத்தமான முறையில் திருத்தங்களை கொண்டு வரவும், மாதிரி வாடகை சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்ததை அடுத்து இது சம்பந்தமாக அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பூசல்களுக்கு விரைவாக தீர்வு ஏற்படுத்துவதற்கான அமைப்புமுறையின் மூலம் பயனுள்ள மற்றும் வெளிப்படைத்தன்மை வாயிலாக வாடகைதாரர்கள் மற்றும் உரிமையாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் வளாகங்களில் வாடகையை ஒழுங்குமுறைபடுத்தி வாடகை வீடுகளை ஊக்கப்படுத்துவதே இந்த மாதிரி வாடகைச் சட்டத்தின் நோக்கமாகும். பிரச்சினைகளை விரைவாக முடித்து வைப்பதற்கு ஏதுவாக வாடகை நீதிமன்றம் மற்றும் வாடகை தீர்ப்பாயம் ஆகியவை 60 நாட்களுக்குள் வழக்கை முடித்து வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சீர்மிகு நகரங்கள் இயக்கம்: 100 நகரங்களை சீர்மிகு நகரங்களாக மேம்படுத்தும் முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்மிகு நகரங்கள் இயக்கத்தின் கீழ் ஜூலை 9, 2021 வரை, ரூ. 1,80,873 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு வரும் 6,017 திட்டங்களுள் ரூ.‌48,150 கோடி மதிப்பில் 2,781 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. நகரங்களை கண்டறியும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் மொத்தம் ரூ. 17,590.24 கோடி மதிப்பில் 624 திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் 239 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மத்திய அரசின் பங்காக ரூ. 23,925.83 கோடி மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 20,410.14 கோடி (85%) சீர்மிகு நகரங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நகர்புற திடக்கழிவுகளின் அகற்றம்: நகர்ப்புற திடக்கழிவு ஆணை, 2016-இன் படி 4,372 ஊரக உள்ளாட்சி அமைப்புகள்/ நகரங்களில் திடக்கழிவுகள் அறிவியல் சார்ந்த முறையில் அப்புறப் படுத்தப்படுகின்றன. நகர்ப்புறங்களில் நாளொன்றில் சேகரிக்கப்படும் 1,40,980 டன் கழிவுகளில் 68% அறிவியல் ரீதியில் அப்புறப்படுத்தப்படுகின்றன.

Leave your comments here...