தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வாகனங்களுக்கான பிரத்தியேக கொள்கைகளுக்கு ஒப்புதல்.!
தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வாகனங்களுக்கான பிரத்தியேக கொள்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய கனரக தொழில்கள் இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் கூறியுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கனரக தொழில்கள் இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எனர்ஜி எஃபிசியன்சி சர்வீசஸ் லிமிடெட்டிடம் (ஈஈஎஸ்எல்) இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, எண்ணெய் இறக்குமதிகளை குறைக்கும் வகையிலும், உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் அதை சார்ந்த துறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், மின்சார போக்குவரத்து திட்டத்தை கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (ஈஈஎஸ்எல்-ன் துணை நிறுவனம்) செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மின்சார வாகன தொழிலின் நீண்டகால வளர்ச்சிக்காகவும், இந்திய மின்சார வாகன உற்பத்தியாளர்கள் முன்னணி சர்வதேச நிறுவனங்களாக உருவெடுக்க உதவுவதற்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 49 நகரங்களில் உள்ள 160-க்கும் அதிகமான மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் 1,590 மின்சார வாகனங்களை ஈஈஎஸ்எல் மற்றும் கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் இது வரை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேகாலயா, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 13 மாநிலங்கள் மின்சார வாகனங்களுக்கான பிரத்தியேக கொள்கைகளுக்கு இது வரை ஒப்புதல் அளித்துள்ளன/அறிவித்துள்ளன.
Leave your comments here...