சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக ரயில் இயக்க ரயில்வே வாரியம் முடிவு.!
ஹைட்ரஜன் வாயு மூலமாக ரயிலை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் 2015 மற்றும் கரியமில உமிழ்வு முற்றிலும் இல்லாத ரயில்வே எனும் இலக்கை 2030-க்குள் அடையும் விதத்தில் பைங்குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நமது இலக்குகளை எட்டும் விதமாக ‘முன்னேறிய வேதியியல் செல் மின்கலங்கள்’ மற்றும் ‘தேசிய ஹைட்ரஜன் இயக்கம்’ ஆகிய இரண்டு முன்னணி திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதைத் தொடர்ந்து, நாட்டில் ஹைட்ரஜன் போக்குவரத்தை தொடங்கும் விதமாக பட்ஜெட் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டுள்ள மாற்று எரிபொருளுக்கான இந்திய ரயில்வே அமைப்பு, ஹைட்ரஜன் எரிபொருள் செல் அடிப்படையிலான ரயிலுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றுள்ளது.
இந்திய ரயில்வேயின் பசுமை எரிபொருள் பிரிவாக மாற்று எரிபொருளுக்கான இந்திய ரயில்வே அமைப்பு செயல்பட்டு வருகிறது. வடக்கு ரயில்வேயின் சோனிபட்-ஜிந்த் பிரிவில் 89 கிலோமீட்டர் தொலைவுக்கு இத்திட்டம் தொடங்கப்படும்.
தொடக்கத்தில், இரண்டு மின்சார ரயில் பெட்டிகளும், பின்னர் இரண்டு கலப்புரக பெட்டிகளும் ஹைட்ரஜன் எரிபொருள் செல் சக்திக்கு மாற்றப்படும். வாகனத்தை இயக்கும் பகுதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இத்திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ 2.3 கோடி சேமிக்கப்படும்.
Leave your comments here...