காவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் – இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் மோடி உரையாடல்
சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன், பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் போது, பயிற்சி அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மற்றும் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த ராய் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் :
இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன், பிரதமர் நேரடியாக கலந்துரையாடினார். பயிற்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல், மிக இயல்பாக இருந்தது மற்றும் புதிய தலைமுறை போலீஸ் அதிகாரிகளுடன் எண்ணங்கள் மற்றும் கனவுகள் குறித்து ஆலோசிக்க, அரசுத்துறை அம்சங்களுக்கு அப்பால் பிரதமர் சென்றார்.
ரூர்கி ஐஐடியில் படிப்பை முடித்த, ஹரியானாவைச் சேர்ந்த அனுஜ் பாலிவாலுக்கு, கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது, இது முரண்பாடாக தோன்றினாலும், இது முற்றிலும் அதிகாரியின் பயனுள்ள தேர்வு என பிரதமர் கூறினார். தனது உயிரி தொழில் நுட்ப படிப்பு பின்னணியின் பயன்பாடு, குற்றவழக்கு விசாரணைக்கு உதவியதாகவும், சிவில் சர்வீஸ் தேர்வில் சமூகவியல் பாடத்தை தேர்வு செய்தது, தேர்ந்தெடுத்த வேலையுடன் தொடர்புடையாக இருந்தது என பிரதமரிடம் அந்த அதிகாரி கூறினார். அனுஜ் பாலிவாலின் பொழுது போக்கான இசைக்கு, வறண்ட காவல்துறையில் இடம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவர் சிறந்த அதிகாரியாக செயல்பட அது உதவும் மற்றும் காவல் பணியை மேம்படுத்தவும் அவருக்கு உதவும்.
ரோகன் ஜெகதீஸ் என்ற பயிற்சி அதிகாரி சட்டப்படிப்பை முடித்தவர் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வில், ‘அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள்’ பாடத்தை தேர்வு செய்தார். நீச்சலில் ஆர்வம் உள்ளவர். அவருடன், காவல்துறையில் உடல்தகுதியின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் விவாதித்தார். கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவர் ஆலோசித்தார். ரோகன் ஜெகதீஸின் தந்தை கர்நாடக அரசு அதிகாரி. அங்கு ரோகன் ஜெகதீஸ், ஐபிஎஸ் அதிகாரியாக செல்கிறார்.
கவுரவ் ராம்பிரவேஷ் ராய் என்ற பயிற்சி அதிகாரி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர். அவருக்கு சத்தீஸ்கர் பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவரது பொழுது போக்கு செஸ். அதனால், இந்த விளையாட்டில உள்ள யுக்தி, காவல்துறையில் எவ்வாறு அவருக்கு உதவும் என அவருடன் பிரதமர் ஆலோசித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் இடது-சாரி பயங்கரவாதம் உள்ள பகுதி என்பதால், இப்பகுதியில் தனித்துவமான சவால்கள் உள்ளன என பிரதமர் கூறினார் மற்றும் இங்கு சட்டம் ஒழுங்குடன், வளர்ச்சி மற்றும் பழங்குடியினருடன் சமூக இணைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது என பிரதமர் கூறினார். வன்முறை பாதையில் இருந்து இளைஞர்களை அகற்றுவதில், இவரைப் போன்ற இளம் அதிகாரிகள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என பிரதமர் கூறினார். மாவோயிஸ்ட் வன்முறையை கட்டுப்படுத்தி, வளர்ச்சிக்கான புதிய பாலங்களை ஏற்படுத்தி, பழங்குடியின பகுதிகளில் நம்பிக்கையை நாம் ஏற்படுத்தி வருகிறோம் என பிரதமர் கூறினார்.
ஹரியானாவைச் சேர்ந்த ரஞ்சீதா சர்மா என்ற அதிகாரிக்கு, ராஜஸ்தான் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. சிறந்த பயிற்சி அதிகாரி என்ற பட்டம் பெற்ற அவரிடம், பயிற்சியில் அவரது சாதனைகள் குறித்து பிரதமர் பேசினார் மற்றும் அவரது பணியில் அவர் படித்த வெகுஜன தொடர்பு பாடப்பிரிவின் பயன்பாடு குறித்தும் பிரதமர் பேசினார். பெண்களின் முன்னேற்றத்துக்கு ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் செய்யப்பட்ட பணிகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார். இப்பகுதியில் உள்ள சிறுமிகளின் முழு ஆற்றலை பயன்படுத்த, அவர்களை ஊக்குவிப்பதற்கு ஒவ்வாரு வாரமும் ஒரு மணி நேரம் செலவிடும்படி அந்த பெண் அதிகாரிக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
கேரளாவைச் சேர்ந்த நிதின்ராஜூக்கு அவரது சொந்த மாநிலமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டோகிராபி மற்றும் கற்பித்தலில் அவருக்கு உள்ள ஆர்வம், மக்களுடன் தொடர்பில் இருக்க சிறந்த வழி என்பதால், அதை தொடர்ந்து பின்பற்றும்படி அவர் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பயிற்சி அதிகாரி நவ்ஜோத் சிமி, பல் மருத்துவர். அவருக்கு பீகார் மாநிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் பெண் அதிகாரிகள் இருப்பது நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும் என்று அவரிடம் பிரதமர் கூறினார். மேலும், அவர் தனது கடமையை பரிவுடனும் உணர்திறனுடனும் அச்சமின்றி மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார். காவல்துறையில் அதிகளவில் பெண்களை சேர்ப்பது, அத்துறையை பலப்படுத்தும் என அவர் கூறினார்.
ஆந்திராவை சேர்ந்த கொம்பி பிரதாப் சிவ்கிஷோருக்கு அவரது சொந்த மாநிலமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் காரக்பூர் ஐஐடி-யில் எம்.டெக் பட்டம் பெற்றவர். நிதித்துறை முறைகேடுகளை சமாளிப்பது பற்றி அவரின் கருத்துகள் குறித்து பிரதமர் ஆலோசித்தார். தகவல் தொழில்நுட்பம் உள்ளடக்கிய ஆற்றலை பிரதமர் வலியுறுத்தினார். சைபர் குற்றம் உலகில், உள்ள முன்னேற்றங்களுக்கு ஏற்ப காவல்துறை அதிகாரிகளும் செல்ல வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். டிஜிட்டல் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு அவர்களின் ஆலோசனைகளை அனுப்ப வேண்டும் என இளம் அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
மாலத்தீவைச் சேர்ந்த பயிற்சி அதிகாரி முகமது நசீமுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். மாலத்தீவு மக்கள் இயற்கையை நேசிப்பதற்கு பிரதமர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
மாலத்தீவு அண்டை நாடு மட்டும் அல்ல, சிறந்த நட்புநாடு என பிரதமர் கூறினார். அங்கு போலீஸ் அகாடமி அமைக்க இந்தியா உதவி வருகிறது. இருநாடுகள் இடையேயான சமூக மற்றும் வர்த்தக உறவுகள் குறித்தும் பிரதமர் பேசினார்.
பிரதமரின் உரை இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை குறிக்கிறது. சிறந்த காவல்துறை சேவையை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகளை, கடந்த 75 ஆண்டுகள் கண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், காவல் பயிற்சி தொடர்பான உள்கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தின் உணர்வை, நினைவில் கொள்ள வேண்டும் என பயிற்சி அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
1930 முதல் 1947 ஆண்டுகளுக்கு இடையேயான காலம், சிறந்த இலக்கை அடைய, நமது நாட்டின் இளம் தலைமுறையினர் ஒற்றுமையுடன் வளர்ந்ததை கண்டது. இதேபோன்ற உணர்வு, இன்றைய இளைஞர்களிடமும் எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறினார். ‘‘அவர்கள் ‘சுயராஜ்யத்துக்காக’ போராடினர்; நீங்கள் ‘தற்சார்பு ராஜ்யத்துக்காக’ முன் செல்ல வேண்டும்’’ என பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தியா ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில், பணியில் சேர்வதன் முக்கியத்துவத்தை பயிற்சி அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்திய குடியரசு, சுதந்திரம் அடைந்ததின் 75வது ஆண்டிலிருந்து நூற்றாண்டை நோக்கி செல்லும்போது, பயிற்சி அதிகாரிகளின் அடுத்த 25 ஆண்டுகள் பணி முக்கியமானதாக இருக்கப்போகிறது என பிரதமர் கூறினார்.
தொழில்நுட்ப இடையூறுகள் ஏற்படும் இந்நேரத்தில் காவல்துறையை தயாராக வைத்திருக்க வேண்டியதை பிரதமர் வலியுறுத்தினார். இன்னும் அதிகமான புதிய முறைகளுடன், புதுவிதமான குற்றங்களை தடுப்பது சவாலாக இருக்கும் என பிரதமர் கூறினார். சைபர் பாதுகாப்பில், புதுவிதமான பரிசோதனைகள், ஆராய்ச்சிகள் மற்றும் முறைகளை பின்பற்றவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மக்கள் குறிப்பிட்ட அளவிலான நடத்தையை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். காவல்துறையின் கவுரவத்தை அலுவலகத்தில் மட்டும் அல்லாது அதனையும் தாண்டி மனதில் வைத்திருக்க வேண்டும் என பயிற்சி அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். ‘‘சமூகத்தில் உங்களின் பங்கை நீங்கள் உணர வேண்டும், நீங்கள் நட்பாக இருக்க வேண்டும் மற்றும் சீருடனையின் கவுரவத்தை மிகவும் உயர்ந்ததாக காக்க வேண்டும்’’ என பிரதமர் கூறினார்.
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கொள்கையை முன்னெடுத்து செல்பவர்களாக இருக்க வேண்டும் என பயிற்சி அதிகாரிகளுக்கு பிரதமர் நினைவு படுத்தினார். , ஆகையால், ‘நாடு முதலில், எப்போதும் முதலில்’, என்ற மந்திரத்தை மனதில் எப்போது முன்வைத்திருக்க வேண்டும் எனவும், அது அவர்களின் செயலில் பிரதிபலிக்க வேண்டும் எனவும் பிரதமர் கூறினார். களத்தில், நாட்டின் நலனை மனதில் வைத்து, தங்கள் முடிவை எடுக்க வேண்டும் என பிரதமர் கூறினார்.
புதிய தலைமுறை பெண் அதிகாரிகள், பிரகாசமாக இருப்பதாக கூறிய பிரதமர், காவல்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறினார். காவல் சேவையில், செயல் திறனில் மிக உயர்ந்த நிலை, நம்பகத்தன்மை, அன்பு, எளிமை மற்றும் உணர்திறன் ஆகியவற்றை நமது புதல்விகள் புகுத்துவர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான உள்ள நகரங்களில் கமிஷனர் முறையை அறிமுகப்படுத்துவது பற்றி மாநிலங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன என அவர் குறிப்பிட்டார். இந்த முறை, ஏற்கனவே 16 மாநிலங்களில் பல நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையை திறம்பட மற்றும் எதிர்காலத்துக்கு உகந்ததாக மாற்ற கூட்டாகவும் உணர்திறனுடனும் பணியாற்றுவது முக்கியம் என அவர் கூறினார்.
கொரோனா தொற்று காலத்தில் உயிர் நீத்த காவல்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அவர்களின் பங்களிப்பை அவர் நினைவுக்கூர்ந்தார்.
அண்டை நாடுகளைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் இங்கு பயிற்சி பெறுவது, அந்த நாடுகளுடன் நமது நெருக்கத்தையும் மற்றும் ஆழ்ந்த உறவையும் சுட்டிக் காட்டுகிறது என பிரதமர் கூறினார். பூட்டான், நேபாளம், மாலத்தீவு அல்லது மொரீசியஸ் போன்ற நாடுகளாக இருக்கட்டும், அவர்களுக்கு நாம் அண்டை நாடு மட்டும் அல்ல, நாம் நமது சிந்தனைகள் மற்றும் சமூக கட்டமைப்பில் உள்ள பல ஒற்றுமையான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம் என அவர் கூறினார். நாம் தேவைப்படும் நேரத்தில் உதவும் நண்பர்கள் மற்றும் எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் அல்லது சிரமங்கள் ஏற்பட்டாலும் நாம் ஒருவருக்கொருவர் முதலில் உதவுகிறோம் . இவற்றை கொரோனா தொற்று சமயத்தில் நாம் பார்த்தோம்.
Leave your comments here...