பொருளாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை – நிர்மலா சீதாராமன் தகவல்
- July 27, 2021
- jananesan
- : 485
இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் 2 அலைகளும், அதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதாரத்தை பெரும் நெருக்கடிக்கு தள்ளியிருக்கின்றன.
இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும், வேலை வாய்ப்புகளை பாதுகாப்பதற்கும் ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட வேண்டும் என ஏராளமான பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு பரிந்துரைத்து வருகின்றனர்.இந்த நிலையில் மேற்படி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிடும் திட்டம் எதுவும் உள்ளதா? என மக்களவையில் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘இல்லை’ என கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘2020-21-ம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீத வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்றின் இணையற்ற விளைவையும், தொற்றுநோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் இந்த வீழ்ச்சி பிரதிபலிக்கிறது’ என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
ஆனால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படுவதால் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருப்பதாகவும், தற்சார்பு இந்தியா திட்டத்தின் உறுதியான ஆதரவோடு 2020-21 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதை உறுதியாக இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். உள்ளூர் மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி இயக்கத்தின் விரைவான உயர்வு ஆகியவற்றின் காரணமாக கொரோனா 2-வது அலையின் தாக்கம் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் கூறினார்.
இதற்கிடையே மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், மசூர் பருப்புக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி பாதியாக குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் மசூர் பருப்பின் சில்லரை விலை 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதாவது கிலோ ஒன்றுக்கு ரூ.70-ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்திருப்பதாக நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.எனவே உள்நாட்டு வினியோகத்தை அதிகரித்து விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, அமெரிக்கா அல்லாத பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசூர் பருப்புக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இதைப்போல வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல் மற்றும் சில வேளாண் உற்பத்தி இறக்குமதி பொருட்கள் என சில குறிப்பிட்ட பொருட்களுக்கு இந்த நிதி ஆண்டு முதல் சிறப்பு வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...