சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பக்தர்களும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கொரோனா தாக்கத்தின் 2-ம் அலை தீவிரம் காரணமாக சபரிமலை கோவிலில் 2 மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அதே சமயத்தில் பக்தர்கள் இன்றி பூஜை மட்டும் நடந்து வந்தது.
இந்த நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று முன்தினம் மாலையில் திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நேற்று அதிகாலை முதல் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் நடை திறப்பதற்கு முன்னதாகவே அய்யப்ப பக்தர்கள் திரண்டனர். அதிகாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.
அப்போது சன்னிதானத்தில் கூடி இருந்த திரளான பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என சரண கோஷம் எழுப்பினர். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் நெய்யபிஷேகம், உஷபூஜை, களபாபிஷேகம் நடந்தது.
இவற்றை தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, கலச பூஜையும் நடத்தப்பட்டது. உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை, தொடர்ந்து அபிஷேகம், படிபூஜை நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave your comments here...