பெண்கள் இலவச பயணச்சீட்டை ஆண்களுக்கு கொடுத்து கட்டணம் வசூல்: பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்..!
- July 18, 2021
- jananesan
- : 580
சேலத்தில் அரசு பேருந்தில் பயணிக்க பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை வட மாநிலத்தவருக்கு கொடுத்து கட்டணம் வசூலித்த அரசு பேருந்து நடத்துனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு தற்பொழுது பெண்கள் இலவசமாக அரசு நகரப் பேருந்தில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் ரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து செல்லும் அரசு பேருந்தில் வடமாநிலத்தை சேர்ந்த 26 பேர் ஏறியுள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை நடத்துனர் நவீன் குமார் கொடுத்து கட்டணம் வசூலித்துள்ளார். அரசு பேருந்து ஐந்து ரோடு அருகே வந்த பொழுது போக்குவரத்து துறை அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது வடமாநில ஆண்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சக பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி மாற்று பேருந்தில் அனுப்பிவைத்த அதிகாரிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு பேருந்து நடத்துனர் நவீன் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை ஆண் பயணிகளுக்கு கொடுத்து முறைகேடாக கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நவீன் குமாரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Leave your comments here...