70 லட்சம் ஆலோசனைகளை நிறைவு செய்தது இ- சஞ்ஜீவனி தொலை மருத்துவ சேவை சாதனை.!
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய மருத்துவ சேவையான இ- சஞ்ஜீவனி, 70 லட்சம் ஆலோசனைகளை நிறைவுசெய்து, மேலும் ஓர் மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது.
அதிக ஆலோசனைகளை வழங்கிய மாநிலங்களுள் தமிழகம் (மொத்தம் 1266667 ஆலோசனைகள்) இரண்டாம் இடம் வகிக்கிறது. 1632377 ஆலோசனைகளை மேற்கொண்டு ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தப் புதுமையான மின்னணு ஊடகத்தின் வாயிலாக, மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களிடம் நோயாளிகள், தினமும் மருத்துவம் சம்பந்தமான ஆலோசனையைப் பெற்று வருகிறார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல், இதுவரை இல்லாத அளவில் ஜூன் மாதத்தில் சுமார் 12.5 லட்சம் நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி மற்றொரு மைல்கல் சாதனையையும் இந்த சேவை எட்டியுள்ளது.தற்போது இந்த தேசிய தொலை மருத்துவ சேவை, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வருகிறது.
இ-சஞ்ஜீவனி ஏபி-ஹெச்டபிள்யூசி- மருத்துவர்கள் இடையேயான இந்த தொலை மருத்துவத் தளம், தற்போது 21,000க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களிலும், 30 மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள சுமார் 1900 முனையங்களிலும் அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் தளத்தின் மூலம் 32 லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளனர். புற நோயாளிகளுக்கான இ- சஞ்சீவனி சேவை குறித்த தேசிய புறநோயாளிகள் சேவைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு சேவை வழங்கும் வகையில் சுமார் நூறு முதுப்பெரும் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களை இந்த திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபடுத்தியுள்ளது.
அதிநவீன தேசிய தொலை மருத்துவ சேவையை அதிகரிக்கும் முயற்சிகளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 3.75 பொது சேவை மையங்களின் மூலம் இ-சஞ்ஜீவனி சேவையை அளிக்கும் வசதியை கடந்த மாதம் சுகாதார அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் மேம்பட்ட கம்ப்யூட்டிங்கிற்கான வளர்ச்சி மையத்துடன் இணைந்து மேற்கொண்டது.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகளின் 6-ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்த சேவையை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். இ-சஞ்ஜீவனியின் சிறப்பு சேவைகளால் பயனடைந்து வரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பயனாளியுடன் பிரதமர் காணொலி வாயிலாகக் கலந்துரையாடினார்.
நகர்ப்புற மற்றும் ஊரக இந்தியாவில் நிலவும் மின்னணு சுகாதார பிரிவை இணைக்கும் வகையில் குறுகிய காலத்தில் இந்திய அரசின் தேசிய தொலை மருத்துவ சேவை, இந்திய மருத்துவ விநியோக முறைக்கு ஆதரவளித்து வருகிறது. மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் ஏற்படும் சுமையை குறைக்கவும் இந்த சேவை உதவிகரமாக உள்ளது. தேசிய மின்னணு சுகாதார இயக்கத்திற்கு ஆதரவாக நாட்டின் மின்னணு சுகாதார சூழலையும் இந்த சேவை ஊக்குவிக்கிறது.
Leave your comments here...