பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் ரூ.95,000 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் ரூ.95,000 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர் என பயிர் காப்பீடு வார துவக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக பயிர் காப்பீடு வாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்காக விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:- ஒவ்வொரு விவசாயிக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் (Fasal Bima Yojana) நோக்கம். இந்த காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் ரூ.95,000 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியதில் மாநில அரசுகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
அவர்களின் கடின உழைப்பால், கடந்த 4 ஆண்டுகளில், விவசாயிகள் பயிர் காப்பீடு ப்ரீமியமாக ரூ.17 ஆயிரம் கோடி செலுத்தியுள்ளனர். ஆனால் இழப்பீடாக அவர்களுக்கு ரூ.95 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் அதிக விவசாயிகள் பலன் அடைவர்.இவ்வாறு மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்ட பிரச்சார வேன்களை மத்திய அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்திட்டம் குறித்து மின்னணு புத்தகம், கேள்வி பதில் புத்தகம், வழிகாட்டி புத்தகம் ஆகியவற்றையும் அமைச்சர் வெளியிட்டார்.
Leave your comments here...