ஊழல் புகார் எதிரொலி : 2 கோடி கோவாக்சின் தடுப்பூசி கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தியது பிரேசில்.!
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாவுக்கு எதிரான முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் மத்தியில், பிரேசில் சுகாதார அமைச்சர் பாரத் பயோடெக்கின், 2 கோடி கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கான ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியது. இதையடுத்து 2 கோடி டோஸ் அளவிற்கு வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்தது. ஆனால், பைஸர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் விலை அதிகமாக இருப்பதாகவும் லட்சக்கணக்கானோர் பிரேசிலில் கோவிட் தொற்றால் உயிரிழந்த நிலையில் தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் ஊழல் செய்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.
இது தொடர்பாக பிரேசில் பார்லிமென்ட் உறுப்பினர்களும் சகோதரர்களுமான லூயிஸ் ரிகார்டோ மிராண்டாவும், லூயிஸ் மிராண்டாவும், ‘அதிக விலை கொடுத்து பாரத் பயோடெக்கின் கோவாக்சினை கொள்முதல் செய்ய என்ன அவசியம்’ எனக் கேள்வி எழுப்பினர்.
பிரேசில் பார்லிமென்டிலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து, 2 கோடி கோவாக்சின் டோஸ்களை, 324 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்குவதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Leave your comments here...