நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்
நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் முறையிடுக என நடிகர் சூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாகவும், அதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வுசெய்ய தமிழக அரசு நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்திருக்கிறது. மேலும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க neetimpact2021@gmail.com என்ற இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது. தற்போது இதுதொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
நமது கல்வி உரிமை காப்போம்!!#நமது_கல்வி_உரிமை pic.twitter.com/kdfWEpF0rX
— Suriya Sivakumar (@Suriya_offl) June 19, 2021
அதில், நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் முறையிடுக என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசுப்பள்ளியில் படித்து பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம்.
இங்கு ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிறது. இருவேறு கல்வி வாய்ப்பு இருக்கிற சூழலில் தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வுமுறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை என்றும், ‘’கல்வி மாநில உரிமை’’ என்ற கொள்கையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து பயணிக்கும் அகரம் ஃபவுண்டேஷனும் நீதிபதி ஏ.கே. ராஜனிடம் நீட் பாதிப்புகள் குறித்து பதிவுசெய்து வருகிறது என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.
Leave your comments here...