மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு பணிகள் விரைவில் தொடங்கும் – அமைச்சர் சேகர் பாபு

இந்தியா

மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு பணிகள் விரைவில் தொடங்கும் – அமைச்சர் சேகர் பாபு

மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு பணிகள் விரைவில் தொடங்கும் – அமைச்சர் சேகர் பாபு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட வீர வசந்த ராய மண்டபம் சீரமைப்புக்கு பிறகு குடமுழுக்குக்கான பணிகள் துவங்கும் என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் யானை பார்வதி கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு இன்று மதுரை வந்திருந்தார்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவில் யானை பார்வதி கடந்த சில ஆண்டுகளாக கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு வந்ததை அறிந்து அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மேலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெற்று பார்வதி யானையை காப்பாற்ற இந்து சமய அறநிலையத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதேபோன்று திருக்கோவில்களில் தற்போது 30 யானைகள் உள்ளன. அவை அனைத்தையும் முறையாக பராமரித்து பாதுகாப்பது இந்து சமய அறநிலையத் துறையின் கடமை ஆகும். அதனை தமிழக அரசு சிறப்புடன் செய்யும்.


கடந்த 2019ஆம் ஆண்டு தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீர வசந்த ராயர் மண்டபம் கரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு பணிகள் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும். அதற்குப் பிறகு மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு பணிகள் துவங்கும்.

மலைக்கோயில்களில் முதியோர்களும் சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2010ஆம் ஆண்டு ரோப் கார் வசதி ஏற்படுத்திக் கொடுத்தார். பிறகு வந்த ஆட்சியாளர்கள் சில கோவில்களில் பணிகளை முழுமைப்படுத்தாமலேயே விட்டுவிட்டனர் ஆகையால் அவற்றை எல்லாம் சரி செய்து ரோப்கார் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அதே போன்று அனைத்து இந்து அறநிலைத்துறை கோவில்களிலும் சித்த மருத்துவமனை உருவாக்கப்படும்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோவில் சொத்துக்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக மீட்டு அதன் வருமானம் வேறு எங்கேனும் மடைமாற்றப்பட்டு இருந்தால் அவற்றையும் கண்டறிந்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது உறுதி.

திருக்கோவில்களில் உள்ள நகை உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் குறித்து பொதுவெளியில் தகவல் தெரிவிப்பது அதன் பாதுகாப்பு தன்மைக்கு உகந்ததல்ல. அதன் காரணமாகவே இந்து சமய அறநிலைத்துறை இதுவரை அவற்றை வெளியிட்டதுமில்லை. ஆனால் அவற்றை பாதுகாக்கக்கூடிய பாதுகாப்பு அறைகளை 108 இடங்களில் தமிழக அரசு கட்ட உள்ளது. அந்த அறையின் மாதிரி வடிவத்தை முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற உடன் அவற்றை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

கரோனா பேரிடர் காலத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையால் வெகுவாக தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்து வருகிறது. இனி ஒரு உயிர் இழப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் திருக்கோயில்கள் அனைத்தும் பக்தர்களுக்காக திறந்துவிடப்படும் என்றார்.

செய்தி: Ravi Chandran

Leave your comments here...