மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் கருவறை தீ விபத்து – தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது என்ன?
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், கடந்த 2-ம் தேதி காலை 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் கோவில் கருவறை மீதுள்ள பழமையான ஓட்டுக்கூரை முழுவதும் தீப் பிடித்து சேதமடைந்தது. இதுகுறித்து மண்டைக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். கோவிலில் தேவ பிரசன்னம் நடைபெற்று வரும் நிலையில் அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.
தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் கூறப்பட்ட முழுவிபரம்:- கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சுயம்பு புற்று வடிவிலானது ஆகும்.கேரள பெண் பக்தர்கள் இருமுடிக் கட்டி இங்கு வந்து அம்மனை வழிப்படுவதால் இக்கோயில் பெண்களின் சபரி மலை என்றழைக்கப்படுகிறது. கடந்த 2 ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில்கோயிலின் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது.இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து கோயிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் பத்மாநாபபுரம் சப் – கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. கேரள மாநிலம் வயநாடை சேர்ந்த சோதிடர் ஸ்ரீநாத் மற்றும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேவ பிரசன்னம் பார்க்க தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று காலை மண்டைக்காடு கோயில் வந்து தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியை தொடங்கினர்.முன்னதாக பாறசாலை ராஜேஷ் போற்றி சிறப்பு கணபதி ஹோமம் நடத்தினார்.இன்று (செவ்வாய்க்கிழமை)2 வது நாளாக நடந்த தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் கூறப்பட்ட தகவலில் உள்ளதாவது, திருக்கோவிலில் அம்மனின் புற்று வளர்ந்து வருவதால் மூலஸ்தானத்தை பெரிதாக கட்டவேண்டும்.
கோவில் முழுமையாக வாஸ்துபார்த்து புனரமைக்கபடவேண்டும்.திருக்கோவிலில் பூஜைகள் ஒழுங்காக நடக்கவில்லை.மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யபடவில்லை… அம்மனுக்கு படைக்கப்படும் நெய்வேத்தியம் சுத்தமில்லை. மடப்பள்ளி சுத்தமில்லை. மடப்பள்ளியில் உணவுபொருட்கள் செய்து அம்மனுக்கு படைக்காமலே வியாபாரம் செய்கிறார்கள். கோவிலை வியாபாரஸ்தலமாக மாற்றிவிட்டனர்.கோவிலுக்கு வரும் பட்டுகள் அம்மனுக்கு சாத்தாமலே வியாபாரம் நடக்கிறது. தங்கம் பணம் மோசடிநடக்கிறது. அம்மனுக்கு தினசரி பிரமணர் பூஜை பண்ணுவது இஷ்டம். கோயிலில் திருவிழா நடத்துவது பரிவார மூர்த்திகளை சந்தோசப்படுத்தவும்,பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதற்கும்தான். ஆனால் இது முறையாக செய்யப்படவில்லை.
திருக்கொடி கம்பம் பிரதிருஷ்டை ஆச்சார்யமாகவும்,முறையாகவும் செய்யவில்லை.அன்னை சாந்த சொரூபமாக இருப்பதால் யாரையும் தண்டிக்கவில்லை.தங்க தேர் கோயிலுக்கு கிடைத்தும் முறையாக பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.மாதம்தோறும் பௌவுர்ணமி நாளில் தங்கதேர் அறநிலையத்துறை சார்பாக கட்டணம் இன்றி இழுக்கப்பட வேண்டும். கோயிலுக்குள் 2 கிணறுகள் மூடப்பட்டுள்ளது.கிணறை தோண்டி சூரிய ஒளி விழும்படி அமைக்க வேண்டும்.
அந்த கிணற்றிலிருந்துதான் கோயில் பயன்பாட்டிற்கு நீர் எடுக்க வேண்டும்.கோயிலுக்கு சொந்தமான குளம் பாழ்பட்டு உள்ளது.அதை சீரமைத்து ,அதில் மேல் சாந்திகள் குளித்துவிட்டுதான் கோயில் பூஜைகளை செய்ய வேண்டும்.கோயில் வளாகத்தில் மேல் சாந்திகளுக்கு கழிவறையுடன் தனி அறை வசதி வேண்டும்.பக்தர்கள் உள் பிரகாரத்தினுள் செல்லக்கூடாது.
இத்திருக்கோயிலை பொறுத்த அளவில் பக்தர்கள் எங்கு நின்று தரிசித்தாலும் அன்னையின் அருள் கிடைக்கும்.கோயிலை புதிதாக கட்ட வேண்டும்.அடிப்பகுதியை 5 அடுக்குவுடன் கட்ட வேண்டும்.அம்மனுக்கு நைவேத்தியம் கொண்டு செல்லும்போது சங்கு மற்றும் நாதஸ்வரம் ஊத வேண்டும். ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும். மாசிக்கொடையின்போது திருவனந்தபுரம் அரண்மனை ராணிக்கு பட்டுடன் அழைப்பு விடுக்க வேண்டும்.கொடையின்போது அம்மன் கதையை சொல்லும் வில்லுப்பாட்டு,புல்லுவன் பாட்டு பாட வேண்டும்.இது முன்பு இருந்தது.இப்போது இல்லை. அதை மீண்டும் கொண்டு வர வேண்டும். கோயிலில் முன்பு இசக்கி,பூதத்தான்,பைரவர் ஆகியோருக்கு தனி சன்னதி இருந்தது.இப்போது பைரவர் சன்னதி மட்டும் உள்ளது.
இசக்கி,பூதத்தான் சன்னதிகள் மீண்டும் அமைக்க வேண்டும்.கோயில் முன்பு பக்தர்களை ஒழுங்கு படுத்தும் தடுப்பு வேலியை மாற்றியமைக்க வேண்டும்.அம்மனின் பெயரை சொல்லி பக்தர் சங்கத்தினர் பணம் வசூல் செய்கின்றனர்.இதை நிறுத்த வேண்டும்.அபிஷேக நீர் வழிந்தோட வடிகால் வசதி செய்ய வேண்டும்.மூலஸ்தானத்தில் கோயில் பூசாரிகளை தவிர வெளி பூசாரிகள் புழங்க கூடாது.யானை ஊர்வலத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்.யானை மீது கொண்டு வரப்படும் சந்தனம் சுத்தமானதாக இருக்க வேண்டும்.
முதல் பரிகாரமாக உடனே மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும்.2 வதாக திருவனந்தபும் அரண்மனை ராணிக்கு பட்டு கொண்டு கொடுத்து பரிகார பூஜை செய்ய உத்தரவு பெற்று ,திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோயில்,நாகர்கோவில் நாகராஜ கோயில், மண்டைக்காடு பால்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயில் மற்றும் கோயில் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராம கோயில்களுக்கும் பிடி பணம் கொடுத்து பூஜைகள் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் கோயிலில் பரிகார பூஜைகளான மகா கணபதி ஹோமம்,மகா சுதர்சனம் ஹோமம்,தில ஹோமம் மற்றும் பகவதி பூஜைகள் செய்ய வேண்டும்.இந்த பரிகார பூஜைகளை உடனே செய்ய வேண்டும் என தகவலில் தெரிவிக்கப்பட்டது
Leave your comments here...