பிரதமர் வீட்டு வசதி- நகர்புற திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.!

இந்தியா

பிரதமர் வீட்டு வசதி- நகர்புற திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.!

பிரதமர் வீட்டு வசதி- நகர்புற திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.!

பிரதமர் வீட்டு வசதி- நகர்புற திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளை கட்டுவதற்கான 708 திட்ட முன்மொழிவுகளுக்கு ஜூன் 8-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.

புதுதில்லியில் நடைபெற்ற இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கும் மத்திய ஒப்புதல் அளித்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் (சிஎஸ்எம்சி) 54-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்துக்கொண்டன. பயனாளிகள் கட்டுமானம் மற்றும் குறைந்தவிலை வீட்டுவசதிக் கூட்டாண்மை மூலம் இந்த வீடுகளைக் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, ‘பிரதமர் வீட்டு வசதி- நகர்புற திட்ட விருதுகள்- 100 நாட்கள் சவாலையும்’ அறிமுகப்படுத்தினார். இந்த இயக்கத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி, ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகை செய்வதில் சிறந்த பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போது நடைபெற்ற முதலாவது சிஎஸ்எம்சி கூட்டம், ‘அனைவருக்கும் வீடு’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு 2022-ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு உறுதியான வீடுகளைக் கட்டித்தரும் அரசின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது. பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்குள் வீடுகளை கட்டித் தரும் பணியை நாடுமுழுவதும் நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

“ஒப்புதல் வழங்குவதற்கான கோரிக்கை அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலும் நிறைந்துள்ளது. உபயோகப்படுத்தப்படாத நிதியை முறையாகப் பயன்படுத்தி, உரிய காலத்திற்குள் திட்டங்களை நிறைவடையச் செய்வதில் நாங்கள் தற்போது அதிக கவனம் செலுத்துகிறோம்”, என்று திரு துர்கா சங்கர் மிஸ்ரா கூட்டத்தின்போது தெரிவித்தார்.

நில விவகாரம், இடவியல் பிரச்சினைகள், நகரங்களுக்கு இடையே இடப்பெயர்ச்சி, முன்னுரிமை மாற்றம், உயிரிழப்புகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் தடங்கல் ஏற்பட்டுள்ள திட்டங்களை மாற்றியமைக்குமாறு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொண்டன.

இதுவரை பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 112.4 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, சுமார் 82.5 லட்சம் வீடுகளுக்கு அடித்தளங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 48.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு/ உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இத்திட்டத்தின் மொத்த முதலீடான ரூ. 7.35 லட்சம் கோடியில் மத்திய அரசின் உதவி, ரூ.1.81 லட்சம் கோடியாகும். இதில் ரூ. 96,067 கோடி நிதி வழங்கப்பட்டுவிட்டது.

கடந்த ஜனவரி மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டிய ஆறு கலங்கரை விளக்கத் திட்டங்கள் பற்றி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் செயலாளர் வலியுறுத்தினார். இந்தக் கலங்கரை விளக்கத் திட்டங்கள், சென்னை, அகர்தலா, லக்னோ, ராஞ்சி, ராஜ்கோட் மற்றும் இந்தூரில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...