மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தங்க மேற்கூரை அமைக்க இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி கோரிக்கை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். அம்மன் புற்று வடிவில் சுயம்புவாக தோன்றி காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பு. இக்கோயிலின் மாசி கொடை விழாவின்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி புனிதப்யாத்திரையாக வந்து அம்மனை தரிசிப்பார்கள். பின்னர் இருமுடியில் கொண்டுவரும் பொருட்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.
இந்த கோயிலின் கருவறையின் மேல்பகுதி கேரள பாரம்பர்ய கட்டடக்கலையின்படி ஓடு வேயப்பட்ட கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2ம் தேதி காலை 6.30 மணிக்கு பூஜைகளும், தீபாராதனையும் நடைப்பெற்றது. பின்னர் கோயில் குருக்கள் கருவறையை விட்டு வெளியே வந்தனர். சுமார் 7 மணியளவில் திடீரென கருவறை கூரையில் தீ பிடித்தது. கோயில் குருக்களும் பணியாளர்களும் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் மேற்கூரை முழுவதும் தீ படர்ந்தது.
இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளச்சல் மற்றும் தக்கலை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் கோயில் கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இதையடுத்து கோயிலுக்குள் இருந்த பூஜைப் பொருட்கள் மீட்கப்பட்டன. புற்று வடிவிலான மூலவர் அம்மனுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும் கோயில் ஊழியர்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கோயிலின் மேற்கூரையில் சேதமான ஓடுகளை அகற்றினர். மேலும் கோயிலை சுத்தப்படுத்தும் பணியையும் செய்தனர்.
மேலும் தீ விபத்து குறித்து நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்து சேதங்களை இன்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், அரசு செயலாளர் சந்திரமோகன், குமரி கலெக்டர் அரவிந்த், எம்.எல்.ஏ-க்கள் எம்.ஆர்.காந்தி, தளவாய்சுந்தரம், விஜயதராணி, பிரின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்ட்டின், சுரேஷ் ராஜன், ஆறுமுகதரன், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்கள், இந்து இயக்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பின்னர் நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி அமைச்சரிடம் மனு அளித்தார். அதில் முறையாக தேவப்பிரச்சனம் பார்த்து புனரமைப்புப் பணிகள் செய்யவும் , தங்க மேற்கூரை அமைக்கவும் கோரிக்கை மனு அளித்தார்
Leave your comments here...