“வாட்ஸ் அப்” விவகாரம் – மத்திய அரசு விளக்கம்
- May 27, 2021
- jananesan
- : 693
- வாட்ஸ் அப்
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை (இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021) மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு, மே 26ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் புதிய தொழில்நுட்ப விதிகளை பின்பற்றும் முடிவில் இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தாலும், இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் பயனாளர்களின் தனிப்பட்ட உரிமையை புதிய விதிகள் பாதிக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்தநிலையில் புதிய விதிகள் வாட்ஸ் அப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது என்றும், பயனாளர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொது ஒழுங்கை உறுதி செய்வதற்கும், தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்கும் இந்த தகவல்கள் அடங்கிய விதிகள் அவசியம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Leave your comments here...