விடியல் எப்போது..? தமிழக முதல்வருக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி எழுதிய மனம் திறந்த கடிதம்.!

அரசியல்தமிழகம்

விடியல் எப்போது..? தமிழக முதல்வருக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி எழுதிய மனம் திறந்த கடிதம்.!

விடியல் எப்போது..? தமிழக  முதல்வருக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி எழுதிய மனம் திறந்த கடிதம்.!

விடியல் தரப் போகிறேன் என்று சொல்லி வந்த உங்கள் ஆட்சி, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டக்காரர்களுக்குத்தான் வெளிச்சத்தைக் கொடுக்கும் என்பதும் சாதாரண மக்களின் விடியல் என்பது இன்னும் வெகு தூரம் என்பதுமே உண்மை என்று கேள்வி எழுப்பி செய்தி வாசிப்பாளரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனம் திறந்த கடிதம் எழுதியுள்ளார்.

அதில்:- தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு….!

கொரோனா பாதிப்பால் ஒட்டு மொத்த தமிழகமே அல்லோலகல்லோலப் பட்டுகொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம். தினம் 35-36 ஆயிரம் என தொற்று பாதித்தவர்கள். தினந்தோறும் நீங்கள் சொல்கின்ற (உண்மை…?) 450-500 உயிரிழப்புகள். ஆக்சிஜன் பெட் என்ன… படுக்கையே இல்லை. கொத்து கொத்தாய் மடிபவர்களை புதைக்க இடமில்லை. ஆம்புலன்சில் பலமணி நேரம் காத்திருப்பு. ஆம்புலன்ஸ் மரணம். சவக்கிடங்கில் இடமில்லை. சுடுகாட்டில் டோக்கன் சிஸ்டம். எங்கு பார்த்தாலும் மரண ஓலம். கைமீறி போய்விட்டது என நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்கு மூலம். இப்படி நீங்க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் சின்னாபின்னமாகி , மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கதி கலங்கி நிற்கிறார்கள்.

ஊரடங்கு விஷயத்தில் கட்டுப்பாடு விதிப்பதாகட்டும், அரசின் செயல்பாடுகளாகட்டும் பிரச்சினைகளை கையாள்வதாகட்டும், திட்டமிடுதலில் உங்களிடம் மிகப்பெரிய குறைபாடு உள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

துறை குறித்தே தெரியாத சுகாதார அமைச்சர், சுகாதாரத்துறைக்கு அறநிலையத்துறை அமைச்சரும், அறநிலையத்துறைக்கு நிதியமைச்சரும் பதிலளிப்பது, உங்களது பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தது இதையெல்லாம் பார்க்கும் போது உங்களுக்கு ஆட்சி செய்வதில் திறமை இல்லை என்பதும் தெரிகிறது.

இந்த களேபரத்திலும் இதை மறைக்க நீங்கள் செய்யும் விஷயங்கள் தான் மக்களின் கண்ணை உறுத்துகிறது. தொற்று பாதிப்பால் மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் போது, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வாய்ப்பினை இதற்கு முந்தைய அதிமுக அரசு வழங்கிய நிலையிலும், நீங்கள் பதவிக்கேற்ற வேலை என்று தூத்துக்குடி எம். பி யான உங்கள் தங்கை கனிமொழி கொடுத்த நிர்பந்தத்தில் 16 பேருக்கு மாற்று பணி நியமன ஆணையை வழங்கியுள்ளீர்கள். இதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றதும், போராட்டத்தால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் என்று கூறி 93 பேருக்கு ஒரு லட்சம் ரூபாயை வாரி வழங்கியதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தூத்துக்குடி போராட்டக்காரர்களை தியாகிகள் என நினைத்து விட்டீர்களா? போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் போராடியிருக்கலாம். ஆனா அரசு அலுவலமான கலெக்டர் அலுவலகம் முன்பாக வந்து, போலீசாரின் வஜ்ரா வாகனத்தை கவிழ்த்து, போலீசார் மற்றும் பொதுமக்களின் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தீக்கிரையாக்கி, போலீசார் மேல் கல்லெறிந்து, ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் புகுந்து தீ வைத்து….இதெல்லாம் உங்களுக்கு தியாகச் செயலாகத் தெரிகிறதா?அப்படி என்றால் தமிழக அரசு கலவரத்தை ஊக்குவிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? எந்த போலீஸ் அதிகாரியிடமும் சிபாரிசுக்கு செல்வதோ, அவர்களுக்கு போன் செய்வதோ கூடாது. நான் தான் போலீஸ் துறைக்கு மந்திரி என ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அமைச்சர்களிடம் கூறிய நீங்கள், போலீஸ்காரர்கள் மீதே கல்லெறிந்த போராளிகளுக்கு காசு கொடுப்பது நியாயமா? அப்படி என்றால் இது காவலர் விரோத அரசு என்றல்லவா அர்த்தம்.

தூத்துக்குடிக்கு பக்கத்து மாவட்டத்தில் ஊதிய உயர்வு கேட்டு போராடி, தாமிரபரணி ஆற்றில் குதித்து உயிரிழந்த மாங்கொல்லை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்தோ, கொடியன்குளம் கலவரத்தில் உயிரிழந்தோர் குறித்தோ கவலைப்படாமல் தூத்துக்குடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க காரணமென்னவோ?

களியக்காவிளையில் தீவிரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்ட காவலர் வில்சன் குறித்தோ, கடந்த மாதம் மணல் கடத்தல் மாஃபியாக்களால் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு ஆளான 5 காவலர்கள் குறித்தோ, தினம் தினம் திமுகவின் தீவிர விசுவாசிகளால் ஏச்சுக்கும், பேச்சுக்கும், மிரட்டலுக்கும் ஆளாகும் ( தலைமை செயலகத்திலேயே உங்க எம். எல். ஏ எழிலன் காவல்துறை அதிகாரியிடம் சத்தம் போட்டது வேறு) காவலர் குறித்தோ நீங்கள் கவலைப்பட்டீர்களா? இல்லை. அப்படி என்றால் இங்கே தேசத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கு எதிராகப் போராடுபவர்களுக்கும், கலகக்காரர்களுக்கும் தான் முன்னுரிமை என்கிறீர்களா?

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள் என அனைவர் குடும்பத்திற்கும் நிவாரண உதவி செய்கிறீர்கள். வரவேற்கிறோம். ஆனால் உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட்டீர்களா?விரும்பியா அவர்கள் கொரோனாவை வாங்கி வந்தார்கள். அந்த குடும்பங்களிலும், வேலை செய்யும் ஆண்கள், பெண்கள், பெற்றோர், குழந்தைகள், உடன்பிறந்தோர் என எத்தனை உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கோரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஒரு கோடி கொடுக்க வேண்டும் என்ற சொன்ன நீங்கள், இப்போது டெல்லி, உ. பி, போன்ற பிற மாநில முதல்வர்களைப் போன்று பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவிக்கரம் நீட்டாமல் கலவரக்காரர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்களே!

அதே போல அரசு ஊழியர்களுக்கும், கோரோனா காலத்தில் வேலையே செய்யாத அரசு ஆசிரியர்களுக்கும் கைநிறைய சம்பளத்தை அள்ளிக் கொடுக்கும் உங்களுக்கு, அவற்றில் பாதியை பிடித்தம் செய்து, ஊரடங்கு நேரத்தில் வேலையிழந்த ரூ 8 முதல் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் எனத் தோன்றவில்லையே. அரசு என்றால் அது அனைத்து தரப்பினருக்குமான வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்தும் அரசாக அல்லவா இருக்க வேண்டும்?

விடியல் தரப் போகிறேன் என்று சொல்லி வந்த உங்கள் ஆட்சி, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டக்காரர்களுக்குத்தான் வெளிச்சத்தைக் கொடுக்கும் என்பதும் சாதாரண மக்களின் விடியல் என்பது இன்னும் வெகு தூரம் என்பதுமே உண்மை.
சௌதாமணி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...