கொலை வழக்கு : மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது!
இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார்(37) ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவர். முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அவர்கள் இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த மே 5-ம் தேதி, மல்யுத்த வீரரான சுஷில் குமார் மற்றும் அவரின் கூட்டாளிகள், 23 வயது மல்யுத்த வீரரான சாகர் ராணாவை வீட்டிலிருந்து கடத்தி, டெல்லியிலுள்ள சத்ராஸல் மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.
சத்ராஸல் மைதான கார் பார்க்கிங் பகுதியில் சாகர் ராணா மற்றும் சுஷில் குமார் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சாகர் ராணாவை சுஷில் குமாரும், அவர்களின் நண்பர்களும் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகர் ராணா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, சுஷில் குமார் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சுஷில் குமாரைத் தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இவர் மீது ஜாமினில் வெளியே வர முடியாத ‘பிடிவாரன்ட்’ உள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் சன்மானம் தரப்படும் என டில்லி போலீசார் அறிவித்தனர். சுஷில்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடியானது.
இந்நிலையில், இவரை கைது செய்த பஞ்சாப் போலீசார், டில்லி போலீசிடம் ஒப்படைத்ததாக செய்திகள் வெளியாகின. இதனை தற்போது, டில்லி குற்றப்பிரிவு சிறப்பு பிரிவு அதிகாரி நீரஜ்குமார் உறுதி செய்துள்ளார்.
Leave your comments here...