ஒடிசா மாநிலத்தில் இருந்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு 13 டன் ஆக்சிஜன் வருகை.!
குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு சுமார் 700 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் தினமும் 5 டன் முதல் 6 டன் வரை ஆக்சிஜன் தேவை பட்டு வந்த நிலையில் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் 8 டன் வரை ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆக்சிஜனை பெற்று வருகிறது.
மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தும், திருச்சி மற்றும் தஞ்சாவூரில் இருந்தும் டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்படுகிறது. ஆனாலும், தற்போது தேவை அதிகமாக உள்ளதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் இருந்து 13 டன் ஆக்சிஜன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
அதாவது ஒடிசாவில் இருந்து ரெயில்கள் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. நோய் பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வரவழைக்க மாவட்ட நிர்வாகமும், ஆஸ்பத்திரி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Leave your comments here...