கேதார்நாத் கோவில் திறப்பு – பிரதமர் மோடி சார்பில், முதல் பூஜை
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்லிங்களில் ஒன்றான கேதார்நாத் கோவில் யாத்ரீகர்களுக்காக மே 17-ஆம் தேதி நடை திறக்கப்படும் என்று உத்தரகண்ட் மேலாண்மை வாரியம் தெரிவித்தது.
உத்தரகண்டில் கேதார்நாத் கோவில், ஆறு மாதங்களுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்த ஆண்டும், கோவில் திறப்பு விழா பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர். அவர்கள் வேத மந்திரங்கள் ஓதி, வழிபாடு நடத்திய பின், கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின், லிங்க வடிவில் காட்சி அளிக்கும் கேதாரீஸ்வரருக்கு, பிரதமர் மோடி சார்பில் முதல் சிறப்பு பூஜை நடந்தது.
முதல்வர், தீரத் சிங் ராவத் கூறுகையில், ”கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தை அருளும்படி பிரார்த்தனை செய்கிறேன்,” என்றார். கேதார்நாத் கோவில், பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் நவம்பரில் மூடப்பட்டு, அடுத்த ஆண்டு, மே மத்தியில் திறக்கப்படுவது வழக்கம். கோவிலை மூடும்போதும், திறக்கும்போதும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். கோவில் மூடப்படும் போது அர்ச்சகர்கள், கேதாரீஸ்வரர் சிலையை எடுத்துச் சென்று, மலையடிவாரத்தில் உள்ள உக்கிமடத்தில் வைப்பர்.அங்கு, தினமும் பூஜை நடக்கும். கேதார்நாத் கோவிலை திறக்கும் போது, மீண்டும் கேதாரீஸ்வரர் சிலை அங்கு வைக்கப்படும்.குளிர்காலத்தையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...