மேற்கு வங்க அமைச்சர்களைக் கைது செய்தது சட்டவிரோதம் – திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சி.பி.ஐ அலுவலகம் மீது கல்வீச்சு
மேற்கு வங்காளத்தில் உள்ள நாரதா இணையதளம் 2016ஆம் ஆண்டு ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள் ஹக்கிம், சுப்ரஜா முகர்ஜி உள்ளிட்ட 4 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஜகதீப் தங்கர் அனுமதி கோரியது.அதற்கு கவர்னரும் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, மந்திரிகள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன்மித்ரா, முன்னாள் மந்திரி சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த கைது குறித்து அறிந்ததும் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு சென்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் சி.பி.ஐ அலுவலகம் முன் திரண்டதால் பெரும் பதற்றமான சூழல் நிலவியது . இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.அங்கு பதற்றம் நிலவியது போலீசார் லேசான தடியடி நடத்தினர். சி.பி.ஐ அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
#WATCH | Security forces carried out baton charges against TMC protesters outside the CBI office in West Bengal. pic.twitter.com/yfdWmYLmB4
— ANI (@ANI) May 17, 2021
அங்கு சி.பி.ஐ அதிகாரிகளிடம் பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்ந்த மூத்த தலைவர் மற்றும் எம்.எல்.ஏக்களை நீங்கள் எப்படி கைது செய்யலாம். அவர்கள் சரியான நடைமுறை இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்” என்று அவர் ஆவேசமாக கூறினார்.
மேற்கு வங்காள கவர்னர் ஜகதீப் தங்கர் இந்த சம்பவம் குறித்தும் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீரமைக்கை கோரியும் வங்காள அரசை வலியுறுத்தி கேட்டு கொண்டார். சிபிஐ அலுவலகத்தில் கல் வீசிய சம்பவங்கள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதற்கிடையில், கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ இன்று தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த சபாநாயகர் பிமான் பானர்ஜி அளித்த பேட்டியில், அமைச்சர்களையும், எம்எல்ஏவையும் விசாரிக்கப் போகிறோம், கைது செய்யப்போகிறோம் என்பது குறித்து எனக்கு எந்தவிதமான கடிதமும் சி.பி.ஐ. அமைப்பிடம் இருந்து வரவில்லை. என்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை.எந்தக் காரணத்தின் அடிப்படையில் கவர்னரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் சென்றார்கள் எனத் தெரியவில்லை. அப்போது சபாநாயகர் பதவியும் காலியாக இல்லை. நானும் அலுவலகத்தில்தான் இருந்தேன். கவர்னர் இதுபோன்று அனுமதி அளித்ததும் சட்டவிரோதம். கவர்னர் அனுமதியின் பெயரில் எம்.எல்.ஏ.க்களைக் கைது செய்ததும் சட்டவிரோதம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கைது செய்யபப்ட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை இன்று சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர்.குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்கள் மீது சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. ஜாமீனில் வெளிவந்த ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.எம்.எச். மீர்சா இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளி ஆவார்.
Leave your comments here...