டிஆர்டிஓ தயாரித்த ஆக்சிகேர் கருவிகளை ரூ. 322.5 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை நிதி ஒதுக்கீடு.!
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் 1,50,000 ஆக்சிகேர் கருவிகளை ரூ. 322.5 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது.
எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) வை அடிப்படையாகக்கொண்ட பிராணவாயு விநியோக முறையான ஆக்சிகேர், எஸ்பிஓ2 அளவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பிராணவாயுவை முறைப்படுத்தும் கருவியாகும்.
இந்த ஒதுக்கீட்டின் மூலம் பிராணவாயு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களும், மனிதர்களால் இயக்கப்படும் வகையிலான 1,00,000 கருவிகளும் 50,000 தானியங்கி ஆக்சிகேர் கருவிகளும் கொள்முதல் செய்யப்படும்.
இந்தப் பிராணவாயு விநியோக அமைப்பு முறை, ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகளின் அடிப்படையில் பிராணவாயுவை வழங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மனிதர்களைக் காக்கும். மிகவும் உயரமான பனிப்பிரதேச இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்காக பெங்களூருவில் அமைந்துள்ள டிஆர்டிஓ-வின் ராணுவ உயிரி பொறியியல் & மின் வேதியியல் மருத்துவ ஆய்வகம் இந்த முறையை உருவாக்கியது. கள சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயலாற்றும் வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த விநியோக அமைப்பு, கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்த நிவாரணியாக இருக்கும்.
10 லிட்டர் பிராணவாயு சிலிண்டருடனான அடிப்படை அமைப்பில், எஸ்பிஓ2 அளவீடுகளின் அடிப்படையில் பிராணவாயுவின் போக்கு மனித சக்தியால் கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றொரு வகையில், மின்னணு கட்டுப்பாட்டு சாதனங்களின் உதவியுடன் பிராணவாயுவின் ஓட்டம் தானியங்கியாக கட்டுப்படுத்தப்படுகிறது. குறைவான எஸ்பிஓ2 அளவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளின் போது தானியங்கி முறையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்.
ஆக்சிகேர் முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பிராணவாயு சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக் கவசங்களின் சிறந்த செயல்திறனால் பிராண வாயுவின் பயன்பாடு 30-40% குறைகிறது. இந்த ஆக்சிகேர் கருவிகளை வீடுகளிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும், கொவிட் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம். இந்தக் கருவியின் தொழில்நுட்பத்தை இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ உரிமை மாற்றம் செய்துள்ளது.
Leave your comments here...