கொரோனா பரவலை கட்டுப்படுத்த 6-ந் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா பரவலை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தினார். தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வருகிற 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது பயணியர், மெட்ரோ ரயில், தனியார், அரசு பஸ்கள், வாடகை டாக்சி ஆகியவற்றில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது
* வணிக வளாகங்களில் இயங்கும், பல சரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாகச் செயல்படும் மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி விற்பனை கடைகள் மட்டும், ‘ஏசி’ வசதியின்றி, பகல், 12:00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.
* மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
* மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* அனைத்து உணவகங்களிலும், ‘பார்சல்’ சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள், பகல், 12:00 மணி வரை மட்டுமே செயல்படலாம்.
* உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது .
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.
* ஏற்கனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி ஊரக பகுதிகளில் உள்ள, அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
* சனிக் கிழமைகளில் மீன் மார்க்கெட், கோழி இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில், காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* இது தவிர, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் தொடரும்.இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
Leave your comments here...