அதிகரித்து வரும் கொரோனா : நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி
நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவ ஆக்ஸிஜன் இது ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால் அதன் தேவை அதிகரித்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்ஸிஜன் உருளைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது இதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்:- நாட்டில் போதுமான மருத்துவ தர ஆக்ஸிஜன் வழங்கலை உறுதி செய்ய பிரதமர் மோடி ஒரு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மராட்டியம், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கார், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மற்றும் ராஜஸ்தான்.ஆகிய 12 மாநிலங்களில் ஆக்சிஜன் வழங்கல் மற்றும் திட்டமிடப்பட்ட பயன்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவர் விரிவான ஆய்வு செய்தார்.
இந்த மாநிலங்களில் மாவட்ட அளவிலான நிலைமை குறித்த ஒரு கண்ணோட்டம் பிரதமருக்கு வழங்கப்பட்டது.மத்திய அரசும் மாநில அரசும் வழக்கமான தொடர்பில் இருப்பதாகவும், ஏப்ரல் 20, ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 30 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட கோரிக்கைக்கான மதிப்பீடுகள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த 12 மாநிலங்களுக்கு முறையே ஏப்ரல் 20, ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 30 ஆம் தேதிகளில் மருத்துவ ஆக்ஸிஜனின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 4,880 மெட்ரிக், 5,619 மெட்ரிக் மற்றும் 6,593 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய நாட்டில் உற்பத்தி திறன் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அனைத்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களும், அதனை நிரப்பும் இடங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்திருப்பதோடு, ஆக்ஸிஜன் உருளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என அதில் கூறப்பட்டு உள்ளது.
Leave your comments here...