தடுப்பூசி திருவிழா – 4 முக்கிய விசயங்களை கடைப்பிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள அவசரகால அனுமதியை மத்திய அரசு வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கடுத்ததாக ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிரதமர் மோடி, கடந்த 8ந்தேதி தடுப்பூசியின் 2வது டோசை செலுத்தி கொண்டார்.இந்த நிலையில், தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்குகிறது,
நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், கொரோனா தடுப்பூசி திருவிழா துவங்கியது. பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டினர்.அதேநேரத்தில், பொது மக்களுக்கு பிரதமர் மோடி 4 வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்பூசி திருவிழா தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், நாம் இன்று தடுப்பூசி திருவிழாவை துவங்குகிறோம்.
இதன் காரணமாக, நாட்டு மக்களுக்கு நான்கு விஷயங்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறேன்.
*தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள்.
* கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுங்கள்,
*முக கவசங்கள் அணியுங்கள் மற்றும் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.
* தொற்று கண்டறியப்பட்ட பகுதியை நுண் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றுங்கள் என தெரிவித்து உள்ளார்.
Leave your comments here...