கொரோனா பரவல் – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து
கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 11ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவுவதால், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் திருப்பதி மாநகராட்சி பகுதியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் எதிரொலியால் திருப்பதி, திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதையடுத்து வரும் 12-ந்தேதியில் இருந்து ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசன பக்தர்களுக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதற்கான டோக்கன்கள் வழங்குவதும் நிறுத்தி வைக்கப்படுகிறது. அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்கள் பெற காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வரும் 11-ந்தேதி மாலையுடன் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு, 12-ந்தேதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.நாளொன்றுக்கு ரூ.300 டிக்கெட் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
எனவே திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும், பக்தர்களுக்கான சாமி தரிசன அனுமதி பற்றி தகவல் தெரிவிக்கப்படும். அந்த நேரத்தில் கோவிலுக்கு வந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...