ஏ.சி – எல்இடி விளக்குகள் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தற்சார்பு இந்தியா தொலைநோக்கில், அடுத்த முக்கிய நடவடிக்கையாக ஏ.சி, எல்இடி விளக்குகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்க ரூ.6,238 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொழிற்துறை தடைகளை அகற்றி, பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி, செயல்திறனை உறுதி செய்து உலகளவில் போட்டி போடும் விதத்தில் இந்தியாவில் உற்பத்தியை ஏற்படுத்துவதுதான் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தியாவில் முழுமையான தொழிற்சூழலை உருவாக்கவும், உலக விநியோக சங்கிலியில், இந்தியாவை ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்கும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், சர்வதேச முதலீடுகளை ஈர்த்து, அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதியையும் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு உபயோகப் பொருட்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டமானது, ஏ.சி, எல்இடி விளக்குகள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டு காலத்துக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையில், 4 முதல் 6 சதவீத அளவுக்கு ஊக்கத்தொகை வழங்கும். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பாகங்களை இங்கு ஒன்றாக இணைக்கும் நிறுவனங்களுக்கு இந்த ஊக்கத் தொகை அளிக்கப்படாது.
மத்திய அரசின், இதர உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தில் பயன்களை பெறும் நிறுவனத்துக்கு, இத்திட்டத்தில் சேர தகுதி இல்லை. இத்திட்டம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் பயனடையும்.
இந்தியாவில் உள்ள ஏ.சி, எல்இடி விளக்குத் தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து உலக சாம்பியனாக மாற இத்திட்டம் தூண்டுகோலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் தங்கள் தயாரிப்புகளை விற்க, இந்த நிறுவனங்கள் கண்டிப்பாக பிஐஸ் மற்றும் பிஇஇ தரச்சான்றுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். புதுமை மற்றும் ஆராய்ச்சி திட்டத்தில் முதலீட்டுக்கும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் இத்திட்டம் வழிவகுக்கும்.
உற்பத்தியுடன் கூடிய இந்த ஊக்குவிப்புத் திட்டம், ஐந்து ஆண்டு காலத்தில் ரூ,7,920 கோடி அளவுக்கு முதலீட்டை அதிகரிக்கும் எனவும், உற்பத்தியை ரூ.1,68,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும் எனவும், ஏற்றுமதியை ரூ.64,400 கோடி மதிப்பில் உயர்த்தும் எனவும், ரூ.49,300 கோடி அளவுக்கு நேரடி மற்றும் மறைமுக வருவாயை ஈட்டும் எனவும், கூடுதலாக நான்கு லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave your comments here...