18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஐஎம்ஏ கடிதம்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்க வேண்டும் என பிரதமரிடம் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து 90 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இப்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழலில், போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு மிக அருகிலேயே சென்று இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்லாது, ஆங்காங்கே உள்ள தனியார் கிளினிக்கிலும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்.
மேலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொருட்களை வாங்குவதற்கும் பொது இடங்களில் நுழைவதற்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் ஏதுவாக, தனியார் மற்றும் அரசு துறை பங்களிப்புடன் மாவட்ட அளவில் தடுப்பூசி செயல் நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும். இதில் பங்கேற்க ஐஎம்ஏ தயாராக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மேலும் பரவுவதைத் தடுக்க குறுகிய காலத்துக்கு தொடர்ச்சியாக பொது முடக்கம் அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, திரையரங்குகள், கலாச்சார மற்றும் மத நிகழ்ச்சிகள், விளையாட்டு உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.
தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மற்றும்மனித சக்தியை வழங்க ஐஎம்ஏ தயாராக உள்ளது. நெருக்கடியான இந்தத் தருணத்தில் அரசுக்கு ஐஎம்ஏ உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...