பிரதமர் மோடி இன்று மதுரை-நாகர்கோவிலில் பிரச்சாரம்.!
- April 2, 2021
- jananesan
- : 1032
- Narendra Modi

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கடந்த 30-ந் தேதி தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
அதனைத்தொடர்ந்து மீண்டும் தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக மோடி நேற்று இரவு மதுரை வந்தார்.இதற்காக கொல்கத்தாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இரவு 8.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்திறங்கினார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் அவர் காரில் புறப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையில் வந்திருந்தார். அவரை பார்த்த பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர். மோடியும் உற்சாகம் அடைந்து பக்தர்களை நோக்கி கை அசைத்தார்.கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் அதிகாரிகள் அவரை கிழக்கு வாசல் வழியாக உள்ளே அழைத்துச் சென்றனர். கோவிலில் உள்ள பிரமாண்ட தூண்களில் உள்ள சிற்பங்களையும், கோவில் விதானத்தில் வரையப்பட்டு இருந்த ஓவியங்களையும் பார்த்து ரசித்தப்படியே மூலஸ்தானத்தை நோக்கி சென்றார். பொற்றாமரை குளம் அருகே நடந்து சென்ற போது அதன் பெருமைகளை மோடியிடம் விளக்கினார்கள்.விநாயகர், முருகப்பெருமான் சன்னதியில் சாமி கும்பிட்டு விட்டு மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மோடி சென்றார். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு, தொடர்ந்து சுந்தரேசுவரர் சன்னதிக்கு சென்றும் பயப்பக்தியுடன் தரிசனம் செய்தார்.
Prayed at the Madurai Meenakshi Amman Temple. pic.twitter.com/ZUDRIZavDH
— Narendra Modi (@narendramodi) April 1, 2021
கோவில் சார்பில் அவருக்கு நினைவுப்பரிசு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் அவர் காரில் புறப்பட்டு, திருப்பரங்குன்றம் சாலை பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினார்.மோடி தங்கிய இடம், அவர் வந்து சென்ற சாலைகள், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் பகல் 11 மணிக்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய மந்திரிகள், தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் பிரதமருடன் முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,
த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன், பா.ஜ., தமிழக தலைவர் முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பொதுக்கூட்டத்தில், தென் மாவட்டங்களில் இருந்து, அ.தி.மு.க., – பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
நாகர்கோவிலில் பிரசாரம்
மதுரையில் பிரசார கூட்டம் முடிந்த பின்னர் விமானத்தில் மோடி கேரள மாநிலம் பத்தனம்திட்டை சென்று அங்கு பிரசாரம் செய்கிறார். கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இன்று மதியம் 2 மணி அளவில் வந்திறங்குகிறார். அவரை மத்திய மந்திரிகள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங், பா.ஜனதா அகில இந்திய பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரசார பொதுக்கூட்ட மேடையை வந்தடைகிறார். பின்னர் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.
இதையொட்டி கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வந்திறங்கும் அரசு விருந்தினர் மாளிகை ஹெலிபேடு, அங்கிருந்து அவர் அகஸ்தீஸ்வரத்துக்கு சென்று, வரும் பாதைகள், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 5 ஆயிரம் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு பணி ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார், போலீஸ் ஐ.ஜி. முருகன், டி.ஐ.ஜி.க்கள் பிரவீன்குமார் அபிநபு (நெல்லை), ஜெயகவுரி உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நேற்று குமரி வந்தார். பின்னர் அவர் பிரதமர் வந்திறங்கும் ஹெலிபேடு, அவர் கல்லூரிக்குச் செல்லும் பாதை, விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரசார பொதுக்கூட்ட மேடை ஆகியவற்றையும், அவற்றில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.
Leave your comments here...