சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியதால் வழி அடைப்பு – சர்வதேச வர்த்தகம் முடங்கும் அபாயம்
உலகின் பரபரப்பான வர்த்தகப் பாதைகளில் ஒன்று எகிப்தின் சூயஸ் கால்வாய். இந்த கால்வாய் வழியில்தான் குறுக்கே 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான எவர் கிவ்வன் கப்பல் மாட்டிக்கொண்டுள்ளது. எகிப்தில், மத்திய தரைக்கடல் பகுதியையும், செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் 1869ம் ஆண்டு, கப்பல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. இந்த கால்வாய், 163 கி.மீ., நீளமும், 300 மீட்டர் அகலமும் உடையது
கடந்த செவ்வாய்க் கிழமை கால்வாயின் இரு பக்கங்களிலும் இக்கப்பல் மோதி, பக்கவாட்டில் மாட்டிக்கொண்டதால் மிகப்பெரிய கடல்வழி டிராஃபிக் ஜாம் உருவாகி உள்ளது. இதனால் டஜன் கணக்கான கப்பல்கள் கடந்து செல்ல முடியாமல் கடலில் தேங்கி நிற்கின்றன.
கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 22) காலை, எவர் கிவன் எண்ணெய்க் கொள்கலன் கப்பல் சீனாவிலிருந்து நெதர்லாந்தின் துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டது. இக்கப்பல் ஆயிரக்கணக்கான டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் சூயஸ் கால்வாயின் வழியாக சென்று கொண்டிருந்தது. மார்ச் 22 அன்று எகிப்தின் சூயஸ் கால்வாயை வந்தடைந்த இந்தக் கப்பல் மார்ச் 23 அங்கிருந்து புறப்பட்டு நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கி நகர ஆரம்பித்தது.
சூயஸ் கால்வாயின் ஊடே அமைதியாக சென்று கொண்டிருந்த கப்பல், எதிர்பாராமல் வீசிய திடீர் காற்றால் தன் கட்டுப்பாட்டை இழந்து, கப்பலின் முன்பக்கம் கால்வாயின் வடக்கு பக்க கரையில் மோதி திருப்ப முடியாதபடி மாட்டிக்கொண்டது. அதே வேகத்தில் கப்பலின் பின் பகுதி மேற்குப் பக்கமாக இழுபட்டு கால்வாயின் மறு கரையில் சென்று மோதி மேற்கொண்டு நகர முடியாமல் இறுகியது.
அங்கு வீசிய கடும் காற்று, மணல் சூறாவளி, தூசி புயலால் ஏற்பட்ட பார்வைக்குறைப்பாட்டால் இந்த அசம்பாவிதம் நிகழந்திருக்கலாம் என்று கப்பல் நிறுவனம் விளக்கம் அளிக்கிறது. கப்பலின் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் இதுவரை எந்த ஒரு எண்ணெய்க் கசிவோ, வேறு அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சரக்கு கப்பலை, அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளில், மீட்புப் படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த கால்வாய், ஆசிய – ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்தை மிகவும் சுலபமாக்கியது. ஒட்டுமொத்த உலக வர்த்தகத்தில், 12 சதவீத வர்த்தகம், இந்த கால்வாய் வாயிலாகவே நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும், இந்த கால்வாய் வழியாக, 19 ஆயிரம் கப்பல்கள் சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...