கமல்ஹாசன் கட்சி பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
திருப்பூரில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் அனிதா டெக்ஸ்காட் என்ற பின்னலாடை நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை மற்றும் கொரோனா கவச ஆடைகள், முக கவசங்களை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கி வருகிறார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளராகவும் உள்ளார்.
இவரது நிறுவனத்திற்கு நான்கு வாகனங்களில் வந்த வருமான வரி துறை அதிகாரிகள் 8 மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்நிலையில், சந்திரசேகரனின் சொந்த சகோதரரும் மதிமுக திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜனுக்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், அவரது நண்பரும், சென்னியப்பா நகர் பகுதியில் உள்ள திமுக நகர செயலாளர் தனசேகர் என்பவர் வீடுகளிலும் இரண்டு வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் 8 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை கூறியுள்ளது. முதலீடு, வரவு செலவு குறித்த ஆவணங்கள் குறித்த விசாராணை தொடர்ந்து நடந்துவருகிறது. சோதனைக்குள்ளாகியுள்ள சந்திரசேகரனுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் என்ன தொடர்பு?
கோவை தெற்கு தொகுதியில் களம் கண்டுவரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் தொழில் கூட்டாளிதான் இவர். நடிகர் கமலுடன் ஒரே மேடையில் தோன்றியுள்ள சந்திரசேகரன் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், மத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் பொருளாளராக இருப்பதாக சொல்கிறது அக்கட்சியின் இணையதளம். இந்த வருமானவரித்துறை சோதனை குறித்து மக்கள் நீதிமய்யத்தின் சார்ப்பிலோ, அல்லது சந்திரசேகரன் தரப்பிலிருந்தோ எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
Leave your comments here...