ரயில்வேதுறை தனியார் மயமாக்கப்படாது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்.!
இந்திய ரயில்வேத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற செய்தி தொடர்ந்து வந்த வண்ணமே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபாவில் நேற்று, ரயில்வே மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:ரயில்வேயை தனியார் மயமாக்க முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு கூறப்படுகிறது. சாலைகளில், அரசு வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என, கூற முடியாது.
தனியார் வாகனங்கள் செல்வதால், பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதேபோல், அரசின் முக்கிய துறைகள், தனியாருடன் இணைந்து செயல்படும்போது மட்டுமே, நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும்; அதிக வேலை வாய்ப்புகளும் உருவாகும். ஒரு துறையின் செயல்பாடுகள், மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கிறோம்.
அதே நேரத்தில், இந்திய ரயில்வே, ஒவ்வொரு இந்தியரின் சொத்து; அது அப்படியே இருக்கும். எந்த நிலையிலும், ரயில்வே தனியார் மயம் ஆக்கப்படாது. பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், உட்கட்டமைப்பில் ரயில்வே துறை வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கான இயந்திரமாக, ரயில்வே செயல்பட வேண்டும் என, விரும்புகிறோம்.
கடந்த நிதியாண்டில் ரயில்வே துறைக்கான முதலீடு, 1.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் இது, 2.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.அதேபோல், பயணியரின் பாதுகாப்பில், நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில், ரயில் விபத்துகளில் பயணியர் யாரும் இறக்கவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
Leave your comments here...